நிறமில்லா பூக்கள்
எனக்கான ஒவ்வொரு
விடியலிழும்..
என் கலைந்த
படுக்கை அறையில்..
விழி நுழைய முடியாமல்
விழுந்துகிடக்கும்
ஓர் ஒற்றைக்கனவு..
ஆடை கலைதல்
அவசியமில்லை என்றும்..
அணைப்புகளே..
போதும் என்ற
வார்த்தைகளற்ற என்மொழியை..
நீயும் சரி..
உன் இரவும் சரி..
அறிந்ததேயில்லை..!
நான்..
பாத்திரங்களோடு..
பேசி சமைத்த..
உனக்கான உணவை..
பேசாமல் சாப்பிட்டு..
போகும் பாத்திரம் நீ.!
நீ என் கூந்தலில்
சூடுவதற்கான..
பூவை மட்டும்
இந்த பூமி இதுவரை..
பூக்கவைத்ததே இல்லை..!
நான் கேட்ட பூவுக்காக..
என்னை வாடவைத்துவிட்டு..
நான் கேட்காத பூவை..
என்னில் மலரச்சொல்லி..
மன்றாடுவாய்.!
ஓசைகளற்ற கொலுசோடு..
இந்த வீட்டில் உலவுவதும்
ஓய்ந்துவிட்ட மனசோடு..
உன்னிடம் வாழ்வதும்...
பழகிவிட்ட ஒன்றானது.
கழுத்தில் மாலையோடு..
சுவற்றில் தொங்கும்..
நம் கல்யான புகைப்படம்..
ஆணிக்கும்
ஆழ்மனதுக்கும்
அவசியமற்று கிடக்கிறது..!