இந்த இரவு கனக்கிறது

பெருகும் அந்தியில்
மழை நேரத்துக் காளான்
என முளைக்கிறது
நட்சத்திரங்கள்.

சிறகில் நினைவு குவித்து
வானத்தின் முகத்தில்
வண்ணம் தூவுகிறது பறவை.

கூடுகளில்
இறக்கிவைக்கப்பட்ட முட்டைகள்
அடைகாத்தலுக்காகக் காத்திருக்கின்றன.

கூடுகளுக்குள் விரியும்
முட்டைகளின்
சிறகுக் கனவுகளை இரசித்தபடி
அதிர்வெழுப்பாத மரங்கள்
முகமற்ற நிலவில்
தம் கனவுகளை ஒளித்து வைக்கின்றன.

கடலின் இடுக்குகளில்
கசிந்த மனித வியர்வை
முனை மழுங்கிய வாழ்வை
உப்பாய் வடியச் செய்கிறது
கரைகளில்.

புதையும் இரவில்...
இறுகும் வயல்வெளி
வளைக்குள் பதுங்கிய
நிசப்தத்தை
பெருத்த கிழங்குகளாய்
புதைக்கிறது.

தனிமையில்...
ஈர நாவால் நக்கி
கன்றுக்கு உயிர் கூட்டும் பசு
தொழுவத்தில் உறங்கும் இரவை
வாலால் விரட்டுகிறது.

நானோ...
நீர் நனைந்த கண்களால்
அள்ளிஎடுக்கிறேன்
இடை சிறுத்த பட்டாம்பூச்சியென
பறந்து செல்லும் உன்னை.

கழிவுகளாகி மறையும் காலத்தில்
உனது புத்தகத்தில்
உறங்கும் எனது
மயிற்பீலி நினைவுகளால்...

அதிகரித்துக் கொண்டே
இருக்கிறது
இரவின் கனம்.

எழுதியவர் : rameshalam (21-Sep-15, 12:41 pm)
பார்வை : 134

மேலே