திரும்பவும் திருவிளையாடல்

திரும்பவும் திருவிளையாடல்

முன்னுரை:

முன்னர் முளைத்த அழகிய காதிலும்
பின்னர் முளைத்த கொம்பு வலியது-அத்துடன்
முன்னோர் படைத்த பழைய புராணம்
இன்றும் நடப்பதைக் காண்பது இனிது!.
***********************************************************************************************************************************************
அவை அடக்கம்.
சின்னவன் நானும் அவை அடக்கமாய்
பின்னிடும் இந்த நீளக் காதையும்-தங்கள்
சென்னியில் அமுதாய் அபிசேகம் செய்திட
முன்னவன் இறைவன் ஆசியைக் கேட்டேன்!!.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கடவுள் நாமம்

திருநாமம் தன்னை ஒருநேரம் சொன்னவர்
அறம் பெறுவார் செல்வம் சேர்ப்பார்
திருநாமம் தன்னை உளமகிழப் போற்றுவார்
பொருள் குவித்துப் புண்ணியம் சேர்ப்பார்
திருநாமம் கொண்ட ஆண்டவனைக் கண்டாரோ
வீட்டு நெறி சேர்வார் அன்றே.!!!!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
திருவிளையாடல் அரங்கேற்றம்.

உள்ளக் கூடமதில் ஊக்கத் தறி நிறுவி
தள்ளரிய அன்பதனால் தொடர்பூட்டித் தனக்குக்
கள்ளவினைப் பிறவி காசினியில் நீங்கிடவே
வெள்ளமுதம் படைப்பாள் வேண்டுவோர்க்கு.

பழுதற்ற வாய்ச்சொல் லதுவே .மதுமலராக
முழுதுநிறை பத்தியுடன் முன்னவனை ஏத்தி
தொழுதிடும் அவளோ தோவாளை எனுமூரில்
கொழுது அகன்ற மனமுடையாள்.

அல்லைஇது அல்லைஇது என்று நான்கு வேதமும்
சொல்லும் வழியாவையும் செவிடன்காதுச் சங்கென
எல்லையற்று ஆடிடும் இழிமாந்தர் இடையினில்
தொல்லையற்ற தொழுகை தொடர்ந்தே வந்தனள்..

அம்புயத்தவனே அனாத ரட்சகனே என்றவனை
சம்புபத்தன் சச்சிதானந்தான் என்றெலாம் பரவியே
நம்பி நம்பி நமஸ்கரித்து நாளும் இருப்பதால்
உம்பருலகுவிட்டு இங்கு வந்தருள வேண்டினள்.

பொம்மையின் பொலிவோ பொருள்தரு எழிலோ
கொம்மை முலையழகோ கோடிபெறு நிலபுலனோ
கைம்பெண் எனக்கில்லை கையினால் நானுனக்கு
செம்மை விருந்தளிப்பேன் சீக்கிரம் வாவென்றாள்.

சத்திய ஞானானந்தத் தத்துவந்தன்னை உள்ளே
வைத்தநல் வடிவமான வைத்தியன் வந்து நின்று
அத்துவீதிய நாடகம் ஏறட்டும் அரங்கிலென்று
சத்தியம் செய்தனனே ஏழாம் நாள் வருவேனென.

காதணிகலனோ கையணிகலனோ இல்லாப் பெண்
ஆதரம் பெருக்கிடவே அரியபாத் திரபண்டம் ஆங்கு
சேதரம் சொல்லும் சேட்டுக் கடையடகு வைத்து
மேதினியாள்வோனின் வருநாளை பார்த்திருப்பாள்

புங்கவன் வந்து சேரும் பொன்னாள் வந்ததென்று
சங்கூதக் கேட்டுச் சடுதியிற் சமையல் செய்து
அங்குமிங்கும் அலைபாயும் கண்களால் தேடியவள்
எங்குமே காணவில்லை மதியமது முடியும்வரை.

உருவம் மெலிந்து பற்கள் முப்பத் திரண்டிலும்
கருமையே படர்ந்த காவியுடைக் கிழமொருவன்
துருவம் அடுத்ததாம் தூர தேசத்தில் இருந்து
வருவதால் பசியென்றான் மீதமின்றிப் புசித்தான்.

விண்ணவர் தலைவர்க்கென்று விருந்தெனச் செய்ததை
தொண்டர் ஒருவன் தின்று தீர்த்து விட்டபடியால்
கிண்ணத்தின் அளவும் ஏதும் கொடுத்திட இல்லாமற்
கண்ணிய மாதவள் கவலையில் உறைந்தனள்.

பின்னொரு முறையும் அந்த பன்னாரிசேட்டுக் கடையில்
முன்னார் அடகில் வைத்தபொருள் மறுமதிப்பீடு செய்து
சின்னதொரு தொகையைப் பெற்றாள் வீடு மீண்டாள்
மன்னவன் பசியை ஆற்றும் அடிசிலை சமைத்து வைத்தாள்..

ஆடையோ முப்புரி நூலோ ஏதுமே இல்லா ஒருவன்
சாடையில் வயிறு தடவி வாய்க்குமோ ஏதுமென்றான்
வாவெனச் சொல்லி அவனை வயிறார உண்ணவைத்து
வாய்க்குவெற் றிலையும் பாக்கும் செரித்திட ஈன்றாள்.

கனவிலே வந்தகடவுள் கட்டாயம் வருவானென்று
மனதிலே உறுதி கொண்டு பழையதோர் வெள்ளிக் கிண்ணம்
கணமது இல்லையெனினும் கால்வயிற்றுக் கஞ்சிக்காகும்
சினமுடன் வைத சேட்டை கெஞ்சியே காசு பெற்றாள்.



வழியிலே விழியிற் பட்ட வெண்ணெயும் நெய்யும் வாங்கி
கழிவிலா வகையிற் சோறு கைப்பக்குவம் கவிந்து ஓங்க
அழிவிலா அண்ணலவனின் ஆகமனம் ஆகுமென்று
ஒழிவிலா துடிப்பு கொண்டே தூயவள் தூண்பற்றி நிற்க

நாசியை மூடிக்கொள்ள வைத்திடும் நாற்றங் கொண்ட
ஊசியும் பாசியும் விற்கும் குறமகள் ஒருத்தி வந்து
ஆசியுண்டாகும் அம்மே அடியவள் பசியைப் போக்கெனப்
பேசிய பேச்சைக் கேட்டு நேசமாய் விருந்தளித்தாள்.

சொன்னது போலே அன்று சொர்ணத்தான் வராதபோது
இன்னலை மட்டுமனுப்பி என்ன விளையாட்டிதுவென்று
எண்ணிய கிழவியின் உள்ளம் கண்ணிலே நீரை வடிக்க
வெண்ணிலா வானில்வந்த வேளையில் உறங்கலானாள்.

வருவேன் வருவேனென்று வராமலே நின்று விட்ட
உருவம் இலான்தன்னை உண்மையில் கடிவது போலே
பெருமையே இல்லா பேதை பேசாமல் நின்றபோது
பருவுடல் இல்லா அவனும் ஆவியாய் தோன்றினானே.

அங்கைகொண்டு அமுதுசெய்து நீ இங்கு வந்தபோது
அகமகிழ்ந்து உனக்கு ஊட்டி ஆற அமர்ந்த பின்னர்
கொங்குஅவிழ் கோட்டிச் செவ்வாய் குவித்து நீயெனக்கு
தங்கிடும் ஆசீர்தர வராததேனோ கூறிடு என்றாள்.

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் உனது
நல்விருந்தோம்பலை விரும்பியே யாமும் மும்முறை
விருந்துண்ண வந்தோம் வயிராற உண்டோம் அம்மா
அருந்தவத்தாள் யாம் உன்னைப் பெற்றோமே என்றார்.



முடிவுரை

பிறர் நலம் பேணுவதோ பழங்கதையாய்ப் போச்சு
’நமக்கு நாமே” என்பதுதான் இன்று ஆகிவந்த பேச்சு
பிறர் அன்பில் கடவுளையே கண்டிடலாம் என்றால்
அதுவேதான் வேதங்களின் சாரம் என்றாச்சு.!.

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (22-Sep-15, 3:15 pm)
பார்வை : 93

மேலே