என்னவனுக்காக எழுதிடும் ஓர் கடிதம்

கடிதம் என்றவுடன் சிறிது தயக்கம்தான்
அலைபேசி குறுஞ்செய்தியில் தயக்கம் வந்ததில்லை
அன்பானவனே! என்று எழுதிட தோன்றியதில்லை
ஆனால், கடிதம் என்றதும் தொடங்குகிறேன்

“என் உயிரே! “

வாழ்வில் இதுவே முதல் முறை நான் காகிதம் கொண்டு தீட்டிடும் முதல் உரை!
நீ நலமா என்று விசாரிக்க தோன்றுகிறது

“அன்பே நீ நலமா? நான் இங்கு நலமாக உள்ளேன்”

ஒவ்வொரு வார்த்தைக்கும் புன்னகை கொண்டு முடிக்கிறேன்
ஏனிந்த விபரித ஆசையோ தெரியவில்லை காதல் கடிதம் எழுதும் காலமும் இதுவில்லை
காலங்கள் மாறாத காதலை காலங்கள் கடந்த காகிதத்தில் வரைகிறேன்
நாம் பழகிய நாட்களை நினைவு கூறிடும் ஆசையில் தொடங்குகிறேன்

“உன்னருகே நடக்கையில் என் கைப்பற்றியே நடந்தாய்
ஆசையோ என்று அன்று எண்ணியதுண்டு – உணருகிறேன்
அது என்மீதான அக்கறையென்று இன்று!

உன் நண்பர் வட்டத்தில் அறிமுகம் தந்தபோது
பெருமிதம் கொள்கிறாய் என்று நினைத்ததுண்டு – யோசிக்கிறேன்
தங்கையாய் அவர்கள் என்னை கவனித்திடவே என்று!

என் தோழிகளிடத்தில் நன்கு பரிட்சியம் ஆனாய்
பெண் வட்டம் விரும்புகிறவனென்று தோன்றியதுண்டு – நம்புகிறேன்
என் நட்பு வட்டத்தின் பாதுகாப்பினை அறிந்துக் கொள்வதற்கென்று!

என் ஊரின் தெருமுனையோடு என்னை அனுப்பி விடுவாய்
என் பெற்றோருக்கு பயமென சிரித்ததுண்டு – சிந்திக்கிறேன்
உன் பயம் என்னை பற்றி யாரும் தவறாக பேசிவிடகூடாதென்று!

இன்னும் எத்தனையோ சொல்லாமல் என்னூள்ளே!
அதையும் சொல்லமலே புரிய வைத்தாய் என்னவனே!
கடிதத்தில் இனி இடமில்லை ஆனால் என்னிதயத்தில் சேமித்துள்ளேன்!
உன்னையும் நம் இனிய நினைவுகளையும்!!”


(குறிப்பு: என் கவிதை பூக்கள் முகப்பு பக்கத்தில் தோழி ஒருவர் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் கொடுத்த தலைப்பின் கீழ் எழுதியது)

எழுதியவர் : மீனா தங்கதுரை (25-Sep-15, 1:03 pm)
பார்வை : 654

மேலே