பேரன்புப் பெரு வெள்ளம்.
என்ன சொல்வேன்!
இன்று காலை ஏழு மணியளவில்,
நீண்ட நெடிய அத்தெருவில் நடந்து கொண்டிருந்தேன்;
அங்கே ஒரு மூதாட்டி....மூப்பின் விளிம்பிலே முன்னேறி நின்றவள்,
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பொறுமையாய் நின்று,
"அம்மா குப்பை!....அய்யா குப்பை!" என்று
கூவி கூவி கூப்பிடுகிறாள்;
கூபிட்டவரோ உடனே வந்தாரில்லை.
இருப்பினும் பொறுமையாக அம்மை அங்கே நின்றிருந்தாள்.
அவர்கள் அகத்துக் குப்பையை புறத்தே கொணரும் வரை,
உரக்கக் கூபிட்டாள்;
"அம்மா குப்பை! அய்யா குப்பை!"
இறுதியாக குப்பை கொணர்ந்தோரிடம் ஓரிரு வார்த்தையும் பேசுகிறாள்.
விருப்பற்று வெறுப்புற்று வந்தோரையும் அன்புடன் பார்த்து
அவர்களது குப்பையைப் பெற்று தனது தள்ளு வண்டிலே போட்டுக்கொண்டு,
நீண்ட நெடிய அத்தெருவில் ...
"அம்மா குப்பை! அய்யா குப்பை!" என்று
கூவிக் கொண்டே சென்றாள் அம்மூதாட்டி!
பாலு குருசுவாமி.