தனிமரம்
ஒத்தப் பல்லு ஆட்டத்துலயும்
முத்து உதிர கண்டேனே
மொத்தக் காதலு சொல்லுமுன்னே
மூச்சடங்கி போனாயோ... !!!
சுருக்குப்பை சில்லறையா
உன் கன்ன சுருக்கத்துல சிறையிருந்த
சுட்டெரிக்கும் சுள்ளியா
என் கண்ணக்குத்திப் போனாயோ... !!!
தள்ளாதக் கிழவனவிட
தாலிக்கொடி தா கெட்டியுன்னு
தவமாத் தவமிருக்க
வனவாசம் போனாயோ... !!!
நா கையோங்குனக் காலத்துலயும்
கைக்குள்ள அணைச்சவளே
இப்போ கைத்தடியா நிலைக்காம
குருடனாக்கிப் போனாயோ... !!!
உண்ணவச்சு உறங்கவச்சு
என் தாயாவு இருந்தவளே
ஒரு தாலாட்ட முடிக்காம
தனியாத் தூங்கிப்போனாயோ... !!!
சொந்தமுன்னு பந்தமுன்னு
உன்ன சொர்க்கம் சேர்க்க வந்துருக்க
எவன் வந்த எனக்கென்ன
எமன் வரவே பார்த்துருக்கே... !!!