புதுவாழ்க்கை தாருமைய்யா

................................................................................................................................................................................................
உளுந்து களையறப்போ பருப்பை விட்டு தோல் பிடிச்சேன்;
உறக்கம் கலைஞ்ச பின்னும் உருண்டு புரண்டு நான் படுத்தேன்..
மறக்கக் கூடுதில்ல மயிலைப் போல ஆடுறியே..
மனசைத் தூக்கி வச்சா மடிச்சுக் கட்டி தாண்டறியே..!
எறைஞ்சு பேசாதவன் சதங்கை சத்தம் கேட்டதுமே
எட்டூரு கேக்கும்படி சுயபுராணம் படிக்கிறியே..
கருகரு முடிய வெட்டி காட்டு மீசை வளர்க்கிறியே..
மிரட்டற நெனப்பிலதான் வெத்துவேட்டு பொளக்கிறியே..
மேகத்துக்கு மேகம் தாவும் கெண்டை மீனு குளத்தினிலே.!
சில்லடிச்சா சிதறிச் சேரும் சூரியனார் முகநிழலே..
தாகத்துக்கு குனியும்போது வானை விட்டு இறங்கி வந்த
வந்தியத்துத் தேவனாரை உன்னுருவில் காட்டுறியே..!
சாணியள்ளும் சேரியிலே சாமியுந்தன் நிழல் படிஞ்சு
சந்தனத்து வாசனையை சடுதியிலே சேர்க்குதைய்யா..!
சாதிமதம் பார்க்கவில்ல, சௌரியமும் கேக்கவில்ல..
சண்டியரே உனை விரும்ப சாக்குப்போக்கு பிடிபடல..!
வாய்க்கா ஓரத்துல வாய்கிழியப் பேசும்போது
பங்காளி எவனும் வந்தா பகையைப் போல விரட்டிவிட்டு
சேக்காளி போனப்புறம் திரும்ப வந்து பேசியது
ஊருக்குத் தெரியாது, உனக்கும் எனக்கும் தெரியுமைய்யா..!
பூவரசு மரமெனக்கு முந்திப் பொறந்த அண்ண னைய்யா..!
அண்ணன் அடிநிழலில் காத்திருப்பேன் பாருமய்யா..
பூவெடுத்து நீயும் கொஞ்சம் பொழுதிருக்க வாருமைய்யா..!
புண்ணியமாப் போகட்டுமே.., புதுவாழ்க்கை தாருமைய்யா..!
...............................................................................................................................................................................................
சில்லு- உடைந்த பானைத் துண்டு.
...................................................................................................................................................................................................