அம்மா

அம்மா


ஈரைந்து மாதங்கள்
உருவான கருவோடு
சுகமான சுமையாக
வலிதாங்கி வலம்வந்தாய்
எனக்காகக் கருவறையில்
இனியதோர் இடம்தந்தாய்
தொப்புள் கொடிஉறவை
துண்டிக்க நேர்ந்தாலும்
மாறாத உன் அன்பை
மறக்கத்தான் மனம்வருமோ
பூமி தொட்ட நாள்முதலாய்
புரியாமல் நான் அழுவேன்
என்னழுகை புரிந்தவளாய்
என்றைக்கும் நீ துடித்திடுவாய்
உன் ராராட்டைக் கேட்டபடி
பல நாட்கள் உறங்கிடுவேன்
பகலிரவை மறந்திடுவேன்
நான் பேசாத நாள்தொட்டே
என் பசியழுகை புரிந்திருப்பாய்
பால் தந்து பலம் தந்தாய்
உரமான உடல்தந்து
பொலிவான முகம்தந்தாய்



காலப்போக்கில் கரைகின்ற சோகங்கள்
நம்மில் எத்தனை எத்தனையோ
காலமே கடந்தாலும்
வெல்லமுடியா சோகமொன்று
தரணியில் உண்டென்றால் அது
தாயவளை இழந்த தருணம்தானே
உங்கரம்பற்றி நடந்த இடமெல்லாம்
இன்று நீ இல்லாமல் செல்லுகையில்
வெறிச்சோடி போகுதம்மா
நீ இல்லாத சோகத்தை
சொல்லாமல் சொல்லுதம்மா
எனைக் கொள்ளாமல் கொள்ளுதம்மா
புரியாமல் நான் அழுகின்ற தருணமெல்லாம்
என்னழுகை துடைத்திடவே
எப்போதும் நீ இருந்தாய்
இன்று புரிந்தே நான் அழுகின்றேன்
என்பக்கத்தில் இல்லாது போய்விட்டாய்
இருந்தபோதும் தவறில்லை
மறுஜென்மம் எடுத்துவிடு
என்மகளாகப் பிறந்துவிடு
என்மடிமீது தவழ்ந்துவிடு
தேடிச்சென்று வணங்கிவர
தெய்வங்கள் பலவுண்டு
நமைத் தேடிவந்து
அருள்தந்த தெய்வம்
தாய் தவிர யாருண்டு
எல்லாப் புகழும் இறைவனுக்கென்பார்கள்
என்னைப் பொருத்தவரை
எல்லாப் புகழும் அன்னைக்கே என்பேன்
இறைவன் இல்லையென்று சொல்லவில்லை
அன்னையே இறைவனென்று சொல்கின்றேன்
இதுகாறும் நீதந்த தாயன்பு
தண்ணீர் மேல்படர்ந்த தாமரை மலர்போல
என்றைக்கும் எங்களோடு சேர்ந்திருக்கும்
கைகூப்பி வணங்குகிறோம்
கையிருப்பே போதும்தாயே
கணக்கின்றி வாங்கிவிட்டோம்
இனிமேலும் தரநினைத்தால்
உன் ஆசிர்வாதம் அதுபோதும்
தூணிலும் துரும்பிளுமிருப்பது
தெய்வமென்றால்
நீ காற்றிலும் கலந்திருப்பாய்
உனை சுவாசித்து உயிர் வாழ்வோம்

எழுதியவர் : மணியன் (28-Sep-15, 12:02 am)
சேர்த்தது : manian
Tanglish : amma
பார்வை : 181

மேலே