இரக்கமில்லாத வலிகள்
சில வலிகளுக்கு..
இரக்கமே இருப்பதில்லை ..
நீர்த்துப் போகாமல்
ஒண்டுக் குடித்தனத்திற்கு
இடம் கேட்டு ..வந்து ..பின்
நிரந்தரமாய்க் குடிகொண்டு
வாடகைக்கு இருப்பதற்கு வந்த இடத்தையே
எழுதி வாங்கிக் கொள்ளும்..
சில வலிகளுக்கு ..
இரக்கமே இருப்பதில்லை ..
அதோடு போனால் கூட விட்டு விடலாம்..
அவை..
உடையவனின் நம்பிக்கை அஸ்திவாரத்தை
பெயர்த்து எடுத்துக் கொண்டு போய்..
தள்ளி நின்று
எகத்தாளம் இடுவதை..
தாங்கத்தான் முடிவதில்லை..
தடுப்பதற்கும் யாருமில்லை!
குடம் பாலை கூட
நஞ்சாக்கி விடும் ..
சில வலிகளுக்கு ..
இரக்கமே இருப்பதில்லை ..!