ஜுரம்
அத்தாச்சி வீட்டு
படி வழுக்கிய
சுளுக்கு வழிக்கவென
மூன்றாவது தெருவிலிருந்து
செண்பகவள்ளி வருவாள்
விளையாடுகையில்
குப்புற விழுந்து
வீங்கிய மண்டைக்கு
பத்து போட
மில் கார அத்தை
மஞ்சள் அரைத்து
கொண்டு வருவாள்
நாவற் மரத்தில்
தலை கீழ் தொங்கி
ஏறிய குடலை இறக்க
ராசாம்பாள் ஆத்தா
தொப்புள் சுற்றுவாள்
அம்மை போட்டு
வாட்டுகையில்
அலாரம் ஏதும் வைக்காமல்
மணிக்கு ஒரு முறை
அம்மா எழுந்து
கஞ்சி கொடுப்பாள்
மல்டி ஸ்பெசாலிட்டி
ஆஸ்பத்திரியில்
சாதாரண ஜுரத்திற்கு
கேஸ் ஹிஸ்டரி
எழுதி கொடுத்து
முன்னூறு ரூபாய்
வாங்கிக் கொண்ட
யுவதியின்
பற்பசைச் சிரிப்பு
வினோதமாய்
படவில்லை எனக்கு.