என்னை எதற்கு நோட்டம் விடுகிறீர்
இங்கிருப்பது நாம் இருவர் தானே
எதற்கு இத்தனை அதிகமாய் சாதம்
வடித்து வீண் ஆக்குகிறாய் என்றேன்…..
இன்று மிஞ்சினால் நாளை பொங்கல்
தின்றால் தெரியும் தெவிட்டா ருசியும்
என்றவள் சொன்னதைக் கேட்டு நானும்
நன்று நன்று என்று நகர்ந்தேன்……….
புதிதாய் சமைத்த சாதமும் குழம்பும்
பழைய பாத்திரத்தில் இட்டு நிரப்பி
அதிகம் பேசா வேலைக்காரிக்கு அவள்
கொடுத்து அனுப்பி வைக்கக் கண்டேன்!.
தெரியாதது போல் நின்ற என்னிடம்
தெரிந்து விட்டது என்பது தெரிந்ததும்
தெரியாமல் செய்வதே ஈகை ஆகும்
தெரிந்து செய்தால் புண்ணியம் ஆகா!!.
இங்கென்னை எதற்கு நோட்டம் விடுகிறீர்
பங்கு மார்க்கெட் படுத்து விட்டதா?
என்ற கேள்வியில் தாளை எடுத்தேன்.
கரடியின் எருதின் நிலையை அறிந்திட!!!!