நிறம் மணம் குணம்
தாளிப்பு நெடிகள்
நாசிக்கு நல்ல
பழக்கப்பட்டதாகவே இருந்தன....
கத்தரிக்காய் பொரியலும்
முள்ளங்கி
சாம்பாருமாய் இருக்கலாம்...
வந்த இடத்தில்
சமையலறை நுழைவது
நன்றாக இருக்காது....
இப்போதைய
அடடே...ஆச்சரியங்களுக்கு
காரணமாகிப் போனது
மோர் மிளகாயாக இருக்கலாம்..
வாசம் வாசல்
தாண்டுவதற்குள்
"சாப்பிட்டு போண்ணா..."அழைத்தே
விட்டிருந்தாள்.. தங்கை..
நிறம்.. மணம்.. குணம்
ஒன்றிப்போயிருந்த ..
தங்கையின் சமையலில்
இன்னும் அம்மா
உயிரோடிருப்பதாக.... எங்களிருவரின்
கண்ணீர்த்துளிகள்
சொல்லிக் கொண்டிருந்தன...