நாடாத வண்டுகள் பாடாத பண்கள்
பொட்டிட்டுச் சேலை கட்டி நற்
போத வெண்ணீறு இட்டு உடுக்குக்
கொட்டுக்கு இசைய நின்று கூத்தாடி
மட்டில்லா மாலை என்றாகிக் கோவில்
சாமியதன் மார்பினிலும் சாயுங்காலம்
பூமியதன் தாளினிலும் தேடுவாரின்றிக்
கொட்டிக் கிடப்பதென்னவோ சொல்வாய்!
முன்னை இளமொட்டாய் வீசும்
தென்றல் தனில் ஆடி யார்க்கும்
உன் முகத்தைக் காட்டினையே
இன்முகம் இதுவென்றால் மின்னும்
கன்னம் இரண்டிலும் குழி கொள்வாய்!!
காட்டினிலும் தென்கூடல் தமிழ்
நாட்டினிலும் நீ வளர்ந்து அழகு
பூட்டிவிட்ட வஞ்சியென மாறி
வாட்டமென ஒன்றிருப்பின் அதன்
ஆட்டத்தை முடித்து வைத்துக்
காட்டியது கனவு என்று பச்சைப்
பாசாங்கில் பாடுகளை மறைப்பாய்!!!
நாடிக் கடலோடித் தமிழர்
தேடித் திரவியத்தை மகிழ்ந்துப்
பாடுகின்ற தண்தமிழில் ஆணுடன்
கூடிப் பாடிடவும் அவனோடிணைந்து
ஆடிச் செலவிடவும் ஆரணங்கே அவர்
நாடுவதும் உன்னைத்தான் அறிவாய்!!!!
காடாகப் பூத்தாயே கனகாம்பரமே
வாடா மல்லிகையே ரோசாவே
மாடான தனி நிறத்தை உன்
ஆடகமாய்க் கொண்டனையே நீயும்
வாடாமல் வாடி நிற்பதேன்
நாடாத வண்டுகளும் உன்னைப்
பாடாத நற்பண்ணுமாய் இன்று
சாடியே சலனமின்றிக் கிடக்கின்றாய்!!!!!