நாளைய தலைவர்களே, உமக்காய்

துளிர் விடும் முன்னே
உனக்கு சமாதி,
இன்றைய உலகத்திலே!
உன் மழலைக்கு இல்லை
மயங்கும் இதயங்கள்,
அரக்கர் உடல்களிலே!

நடைபாதை அதிலே
நட்டு வச்ச மரங்களாய் - நீ
நாசகர் கூட்டத்திலே!
வாசம் பெறும் முன்னே
வாடிப் போன மலராய் - நீ
வக்கிர உலகத்திலே!

தாலாட்டு பாடிய
தாயவள் உதிரம்,
உன் மேனி வழிந்திடவே!
நீ கைவிட்டு போகும்
இவ்வுலகில் அவள் மட்டும்,
கண்ணீர் கடல் மீதிலே!

சிந்திக்க மறக்கிறான்,
இன்றைய மானிடன்
நாளைகள் உனதென்பதை!
உனக்காய் குரலெழுப்ப,
இயலாமை முகம் கொண்டு,
ஊமையாய் ஒளிகின்றான்!

விடியல்கள் உனக்கிங்கு,
வரமாக வர வேண்டும் - நீ
விருட்சமாய் வளர்ந்திடவே!
நாளைய உலகிங்கு,
இளைப்பாற வேண்டும் - உன்
திறமையின் நிழல்தனிலே!

#Happy_Children's_Day
October 01st

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (2-Oct-15, 6:06 pm)
பார்வை : 8898

மேலே