நீளமான ராத்திரி
கனவுப் பொதிசுமந்து துயில் இரயிலில்
ஏறிக் கொள்கின்ற இதயத்தின் பயணம்
தண்டவாளங்களைப்போல்
முடிவின்றி நீளும்.
துணைக்கு ஆளின்றி
மௌனத்தின் விரல்பிடித்து
ஏக்கங்களோடு எதிர்படும்
சமவெளி தாண்டி
ஏகாந்த மலைகுடைந்து
இருள் சுரங்கத்துக்குள்ளும் தொடரும்.
ஆங்காங்கே தென்படும்
புல்வெளிகளின் பச்சையாய்
நீயும் நானும் கூடிக்க்கலந்த நாட்களின்
ஞாபகப் பசுமைக்குள் ஊடுருவி
இளையராஜாவின் இடைக்கால
வசந்த கானம்போல் தாலாட்டும்
பயணத்தின் இடைவேளைகளில்
சிட்டுக்குருவிகளாய் சில நிமிஷங்கள்
சிறகடித்துப் போகும் ..
தரிக்கும் நிலையங்கள் இல்லா
பயணத்தில் அலுப்பின்றி பயணிக்கும்
துயில் பிரயாணியின் பொதிகளில்
வைகறைத் திருடன் கைவைக்கும் வரையில்
நீள்கின்ற ராத்திரி உணர்த்துவதில்லை
உறக்கத்தின் மறுபக்கம்!
*மெய்யன் நடராஜ்