ஆச்சி மனோரமாவிற்கு அஞ்சலி

ஓலையாலே வேய்ந்திருக்கும் கொட்டகையில் அன்று
==உட்கார்ந்து படம்பார்த்த தமிழ்மக்கள் கண்ணில்
மாலையிட்ட மங்கையாக சினிமாவில் ஆச்சி
==மனோரமா முகம்காட்டி அறிமுகமாய் ஆச்சு
சாலையோர மதில்கள்மேல் பதாகைகள் மூலம்
==சந்தித்த ஆச்சிமுகம் திரையரங்கில் காண
ஆலையிட்டக் கரும்பாகி அல்லலுற்று ஓர்நாள்
==அன்பேவா படம்பார்த்த நினைவலைகள் நெஞ்சில்.
ஓய்வில்லா உழைப்பாலே உன்னதமாய் உயர்ந்து
==உலகத்தார் முன்னாலே கண்ணியமாய் திகழ்ந்து
தாயொருத்தி நடிப்பிற்காய் வாழ்வைஅர்ப் பணித்து
==தற்பெருமைக் காட்டாமல் தலைநிமிர்ந்து வாழ்ந்து
ஆயிரங்கள் நடித்தந்த சாதனைப்புத் தகத்தில்
==அழியாத இடம்பிடித்த பெண்மணியாய் மிளிர்ந்து
நேயமுற்ற ரசிகர்தமை கண்ணீரிலே ஆழ்த்தி
==நீரற்ற தாவரம்போல் ஆக்கிமறைந் தாரே!
எண்ணற்ற ரசிகர்களின் மனதிலிடம் பிடித்து
==என்றென்றும் வாழுகின்ற பாத்திரங்கள் நடித்து
கண்ணுக்குள் நிறைவாக நிறைந்திருக்கும் காட்சி
==காணுகின்ற யாவரையும் ஈர்த்தெடுக்கும் ஆட்சி
மண்ணுக்குள் மறைந்தாலும் மறையாத நீட்சி
==மகிழ்வாக தந்தவரெம் மனோரமா போன்று
பெண்னினத்தில் இன்னொருவர் பிறப்பதில்லை மீண்டும்
==பேர்சொல்லும் அவர்நடிப்பு ஜென்மம்பல தாண்டும்.
சுவாசத்தை சினிமாவின் சூட்சுமமாய் விட்டு
==சொர்க்கத்தின் நாடகத்தில் நடிப்பதற்கு என்று
அவசரமாய் பயணித்த பயணத்தால் கண்கள்
==அரிதாரம் பூசாமல் அழுதற்கு செய்த
தவப்புதல்வி மீண்டுமொரு ஜென்மமுண்டு என்றால்
==தவறாமல் தமிழ்சினிமா நடிகைஎன ஆக
கவலைகளால் உங்களாத்ம சாந்திக்காய் இன்று
==கண்ணீரால் செய்கின்றேன் சிரம்தாழ்த்தி வணக்கம்!
*மெய்யன் நடராஜ்