ஒற்றைக் கண் கொண்ட ஓணான்

ரம்மியமான மாலை
ராவணனான சோலை
ரகசியமாய் சீதைகளோடு
ராமன்களையும் சிறைகொண்டிருக்கிறது......

சிறுபாம்பாய் நெளியும் பாதை
சிட்டுக்குருவியின் வேகத்தில்
சிதறிக்குதிக்கும் சிறுவர்களை
சிரித்தபடியே அணைத்துக்கொண்டிருக்கிறது.....

வானம் தொடவளர்ந்த
வளமான மரங்கள்
வாயு தேவனை நயமாய்
வஞ்சமின்றி வழங்கிக்கொண்டிருக்கிறது .....

நீருற்றுக்கள் வளைய வரும்
நிறை மங்கைகளின்
நிமிர்ந்த இளைமையால்
நிலைகுலைந்து வீழ்ந்துகொண்டிருக்கிறது …..


சிலிர்ப்போடு மரக்கிளைகள்
சிந்தனைபூண்ட மனதுகளை
சிரமமின்றி சிறுபூவாய்
சுமந்து அசைந்துகொண்டிருக்கிறது....

இரவை விரட்ட முயற்சிக்கும்
இரட்டைத்தலை விளக்குகள்
இன்றும் இக்கட்சிகளால் லயித்து
இறைவனை வேண்டிக்கொண்டிருக்கிறது....

ஒரே காட்சிகளானாலும்
ஓயாமல் இன்றும்
ஒற்றைக் கண் கொண்ட
ஓணானொன்று பார்த்துக்கொண்டிருக்கிறது....

எழுதியவர் : க.நஞ்சப்பன் (11-Oct-15, 9:00 pm)
பார்வை : 105

மேலே