மறைந்த மனோரமாவிற்கு நினைவாஞ்சலி

ஆலையிட்ட செங்கரும்பாய் அல்லல்பல பட்டு
------அன்னையுடன் சிறுவயதில் தன்வீட்டை விட்டு
சாலையோரம் பாட்டுப்பாடி பலகாரங்கள் விற்று
------- சந்தர்ப்பம் வந்ததனால் நடிக்கும்வாய்ப்பு பெற்று
மாலையிட்ட மங்கைமூலம் திரைத்துறையில் நுழைந்து
-------- மகத்தான நடிப்பாலே மக்கள்மனம் கவர்ந்து
சோலைவாழும் பறவைபோல பாடும்திறமும் பெற்று
------- சோகமான நடிப்போடு நகைச்சுவைபல தந்தார்
மடைதிறந்ந வெள்ளம்போல மளமளவென படம்குவிய
-------- மனநிறைவாய் பலவேடம் ஏற்றுபடம் நடித்தார்
கிடைத்திட்ட பாத்திரத்தில் பலபடங்கள் நடித்தே
--------- கீர்த்தியு்டன் கின்னஸிலே உயர்ந்தஇடம் பிடித்தார்
கண்ணுக்குள் நிறைந்திருக்கும் அவர்நடித்தக் காட்சி
--------- கைத்தட்டல் பலகண்டார் மனோரமா ஆச்சி
மண்மீதில் இவர்போல இன்னொருவர் என்றும்
--------- மாபுகழை நகைச்சுவையில் பெற்றிடுவார் இல்லை
விருதுகள்பல பெற்றுவிட்டார் நடிப்புத்திறன் காட்டி
--------- விண்முட்டும் பேர்பெற்றார் நமதுஆச்சிப் பாட்டி
வருந்துகிறோம் அனைவருமே இவரின்திடீர் மறைவால்
-------- வாடுதேநம் திரையுலகம் மிகப்பெரிய இழப்பால்
பன்நெடுங் காலமாக பலபேருடன் நடித்து
----------- பாசம்கொண்டார் ஐந்துமுதல் அமைச்சருக்கும் பிடித்து
இன்முகமாய் பழகிடுவார் கோபம்கொண்ட தில்லை
--------- இவ்வுலகில் இவரின்புகழ் என்றும்மணக்கும் முல்லை
மண்ணுலகில் பலவேடம் நடித்துவிட்டோம் என்று
--------- மறந்துவிட்டார் சுவாசத்தை உள்ளிழுக்க இன்று
விண்ணுலகில் தன்பெயரை நிலைநாட்ட எண்ணி
--------- விரைவாகச் சென்றுவிட்டார் அதனாலே கண்ணீர்
அரிதாரம் இல்லாமல் பெருகியே வழிந்திடுதே
- --------- அனைவரது இதயத்தையும் சோகம் உருக்கிடுதே
தெரிந்திடாத மனிதரிங்கு எவருமில்லை இவரை
---------- தேம்பியழ வைத்துவிட்டார் நாட்டிலின்று பலரை
மீண்டுமொரு பிறப்பெடுத்து மண்ணில்வர வேண்டும்
---------- மறைந்தாலும் இவரின்புகழ் அனைத்தையுமே தாண்டும்
வேண்டுகிறோம் இறைவனிடம் மறுபிறவி கொடுக்க
-------- வெண்திரையில் அவரிடத்தை அவர்வந்தே நிரப்ப
கவலைகளை எங்களுக்கு தந்துசென்றாய் இன்றே
--------- காரிகையே உந்தனாவி சாந்திபெற வென்றே
கண்ணீரை காணிக்கையாய் தந்து வணங்குகின்றோம்
---------- கனத்த இதயத்தோடு உந்தன்பாதம் பணிகின்றோம்.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்