தூரத்தில் தெரியுது
செய்வதறியாமல் நிற்கிறேன்
ஒரு கோடை நாளின் வியர்வையினூடே..!
சாகடிக்கப்பட்ட விளை நிலங்கள் மீது
ஓடிக்கொண்டிருந்த தங்க நாற்கரச் சாலை ஒன்றின்
இருமருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை
வறண்ட பூமி வீட்டு மனைகளாய்
பரந்திருப்பதைக் காணுகின்றேன்!
வெறியோடு விரைந்து பாய்ந்து சீறியோடும்
அதி நவீன வாகனங்கள்..அதில்
பாவப்பட்ட நாய்கள்..மாடுகள்..
சில இடங்களில் மனிதர்களும் கூட..
அடிபட்டு கிடப்பதைக் காண்கிறேன்..
வரலாற்றின் பக்கங்களை தாறுமாறாய் ..
விரைவாகப் புரட்டியபடி,
சரியாகப் படித்திடாமல் தேர்வுக்கு தயாராகும்
மாணவன் போல் ..தோன்றும் இந்த நாட்டின்
விரைவான முன்னேற்றம் பற்றி
கூப்பாடுகள் ..கூச்சல்கள் கேட்கிறேன்..!
மதமும்,சாதியும், குண்டர்கள் படையும்
கொள்ளை நோக்கங்களும் மாறி மாறி
வேடங்கள் கட்டி வரிசையில் நின்று
வேதங்கள் ஓதுவதைக் கேட்கிறேன் ..!
வேட்டி, துண்டு சில..சேமிப்பு சில நூறு மட்டும்
தூக்கணாங்குருவிக் கூடு போலொரு வீடு
பேச்சும் செயலும் நேர்மையோடு..என
வாழ்ந்து மறைந்த தலைவர்கள்
வாழ்ந்த கதை இந்நாட்டில்
மறந்து போன கதை ஆனபின்னே
நீண்ட இருள் தான் இனியென்று
நினைக்கின்ற நேரமதில்..
தூரத்தில் தெரியும் ஒளி பிரவாகம் ஒன்று
நேர்கொண்டு வருகுதிங்கு..
இளம் தோள்கள் அவை ..
எதிர்த்து போராடும் சக்தி கொண்டு ..
வருகின்ற காட்சி தனைக் காண்கின்றேன் !
இந்நாட்டை உன்னதமாய் மாற்றுகின்ற
இளந்தென்றல் புரட்சிப் படையதுவென தெளிந்தேன்..
கனவுதான் அக்காட்சி என்றாலும் கூட..
அது பலிக்கின்ற காட்சியும் கூடவே தெரியுதண்ணே!