நீயின்றி தீயின்று
தணலின் முன் நாணலாய் அவள்
சூடாய் எதுவும் அருந்தியதில்லை
இன்று சூடே அவளை அருந்தபோகிறது
உயிரையும் ஒரே மடக்கில்
குடித்துவிட்டால் வலி தெரியாது..
சொட்டுச்சொட்டாய் ரசித்து குடித்தால்
ரணம் தாங்க முடியாதே...
நாணலாய் நெளிந்தாள்.
வருண பகவான் அழுது அடம் பிடிக்கலாமே..
எங்கே போனான்.
பூக்கள்.. வெயிலில் வாடலாம்
தீயில் வேகலாமா?
அன்று அடுப்பில் ஒரு சொட்டு
தீ சுட்டதற்க்கே அப்படி துடித்தேன்..
என்னவர் அதைவிட துடித்தார்.
இன்று எப்படி தாங்கி கொள்வார்
என்னையும் தீயையும்..
அவரின்றி வாழ்வில்லை தான்
ஆனால் உயிருள்ளதே
அதை சட்டென்று எப்படி
தீயில் நனைக்க முடியும்?
துணையின்றி பெண் வாழாது என்ற பயமா?
துணையின்றி கற்பு வழுவாது என்ற பயமா?
இந்த சதி'கார கூட்டத்திற்க்கு...
மகன் மேல் பெற்றோர்க்கு இல்லாத துக்கம்
உடன்பிறந்தோன் மேல் உடன்பிறந்தோனுக்கு இல்லாத துக்கம்
தோழன் மேல் தோழனுக்கு இல்லாத துக்கத்தை
மனைவி மட்டும் காட்ட வேண்டுமா
உடன்கட்டை ஏறி...!
துக்கம் மற்றும் பயத்தின்
கண்ணீர் துளிகளுடன்
கணவனை இழந்த பெண்ணொருத்தி
கடைசி நிமிட மனச்சத்தம்...
யார் காதுக்கும் கேட்காமல்...