வாழ்க எங்கள் கண்ணன்
எட்டாப்பு படிச்சவரு எங்கதாசரு
எட்டாவ தாப்பொறந்த எங்கதாசரு
எட்டாத உயரம்தொட்டார் எங்கதாசரு
எட்டடுக்கு மாளிகையில் பாடிவச்சாரு 1
பட்டணத்தில் பிறக்கவில்ல எங்கதாசரு
பட்டிசிருகூடல் சொந்தம் கண்ணதாசாரு
பட்டதுயர் சிறுவயதில் கொஞ்சமில்லையே
பட்டப்படிப் பறிந்திடாத பெரியமேதையே 2
அனுபவமே ஆண்டவன்னு அறியச்சொன்னாரு
அனுபவித்தோர் பாதையினைப் பாடம்சொன்னாரு
மனுதர்மம் போற்றிவாழ்ந்து மகிழச்சொன்னாரு
மனுடருக்குள் கடவுளையும் மதிக்கச்சொன்னாரு 3
பிள்ளையான முத்தைய்யா பேருசொல்லத்தான்
பிள்ளையாகிப் போனாரே முத்துப்பட்டினம்
கள்ளபிரான் கண்ணனிடம் தஞ்சமாகியே
கள்ளூறும் பேருகொண்டார் கண்ணதாசரே 4
கடினமில்லை சந்தவரி எழுதிச்சொல்லவே
கடிகார நேரமில்லை கவிதைசொல்லவே
குடிகாரை நகர்வாழ்ந்த செட்டியாருங்க
குடிமட்டும் இல்லையின்னா குழந்தைதானுங்க 5
'திருமகள்'உம் கைகொடுக்க திறமைகொஞ்சமாய்
திரும்புகிற திசைகளெல்லாம் தெரியலாகினார்
விருந்தோம்பும் குலம்வந்த வெற்றிமாந்தரும்
விரும்புகிற வாழ்கைவாழ்ந்து விரையமாகினார் 6
'கலங்காதிரு மனமே'என தொடங்கிவைத்தவர்
கலகநிரை அரசியலைக் களைந்துவந்தவர்
பலகாலம் புவியிருந்துப் பார்க்கும்முன்னரே
பலனளித்த ததிகமெனப் பயணமாகினார் 7
நகரத்தார் குலம்வந்த நல்லமனிதரே
நகரங்கள் வியந்துநோக்கும் தமிழரிஞரே
சிகண்டிஇறகு சிகையிருக்கும் சின்னக்கண்ணனாய்
சிகரமாகி என்றும்என்றும் வாழ்கவாழ்கவே 8
மீ.மணிகண்டன்
17-Oct-15
==================================================================
பி.கு : எதுகை காரணமாய் ஊர்ப் பெயர்கள் பாவில் முன்னுக்கும் பின்னாய் மாற்றி அமைக்கப் பட்டிருக்கிறது.
பட்டிசிருகூடல் = சிறுகூடல் பட்டி
குடிகாரை = காரைக்குடி