முத்தமிழ் மகளே

பொழுதாகிப் போனால்
வாசல் வர எனை அழைப்பாய்
தனிமையில் நின்றால்
நாடு நடுங்கி வளி பார்த்து
நிற்பாயே!

புயலோடு புலியாகி
எதிரியின் எறிகணைகள்
பொடியாகும் போதும்
அச்சமின்றி களமாடினாய்

பருவ வயதினிலே
பருக்கள் கண்டால்
கண்ணாடி முன் நின்று
புலம்புவாய்
உடலில் சிறு கிரால்
பட்டால்
ஊற்றெடுக்கும் உன் விழி
உன் உடம்பிலே
வெடி ஏற்றி
எதிரி களம் சிதற
வைத்தாயே என் முத்தமிழ் மகளே!

பெற்றேனே உனை
அன்று வைத்தேனே
பெயர் தமிழினிஎன்று
பட்டம் பெற படிக்கவைத்தேன்
பட்டம் சூடினாய்
வீரத் தாயென்று
உனை பார்க்கையிலே
என் விழி நீர் சொட்டும்
உன் முகம் புன்னகை மலரும்

குழைந்தை பருவத்தில்
உன் சைகைக்கு
நிவர்த்தி செய்தேன்
அரவணைத்து கட்டித்தழுவும் போது
புரியவில்லை மகளே!
என் மடியில் தலைசாய்த்து
வருடச் சொன்ன போது
அறியவில்லை என்
கண்மணியே
நீ கரிகாலன் வளர்த்த
கரும்புலிஎன்று....

எங்கே உன் பயமென்றேன்
தலைவன் சிந்தனை
சொன்னால் பறந்திடும் பயமென்றாய்
மலர்ந்த உன் முகம் எங்கே
கட்டித தழுவி முத்தமிட
உன் தேகம் எங்கே
எம் தேச விடியலுக்காய்
தேசபுயலே நீ எங்கே !!!!!

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (17-Oct-15, 4:26 pm)
Tanglish : mutthamil magale
பார்வை : 187

மேலே