தன்னம்பிக்கைக் குருவிகள்

சின்னச் சின்ன குருவிதான்
வண்ணச்சிறகுகளின்
நம்பிக்கையிலும்
அந்தரத் தொங்கல் கட்டுமானத்திலும்
அழகாய்த் தெரிகிறது
அதன் தன்னம்பிக்கையின் ஆழம்...

சின்னஞ்சிறு அலகுதான்..
அதைக்கொண்டு கட்டும்
மிகப்பெரும் கூடுகளின்
நுணுக்கமான பின்னலில்
தெரிகிறது
முயற்சியின் வேகம்.....!

உற்றுப் பார்க்கிறேன்..
ஒரு நொடிப்பொழுதில்
பல நூறு கழுத்தசைவுகள்...!

அந்த அசைவுகளில்
இசைந்து போகின்றன
ஓலை நார் வைக்கோல்கள்
கட்டுமானப் பொருட்களாய்...!

அற்புதமாய் கட்டும் கூட்டுக்குள்
பொறியியல் வல்லுனர்களுக்கு
சவால் விடும்
அழகிய அறைகளின் கட்டுமானம்..!

கணினியின் யோசனையில்
ஆயிரம் வடிவமைப்புகளை
மனிதன் செய்தாலும்
இணையிலா இவற்றின்
ஒற்றை முயற்சியின்
ஒரு நாள் பொழுதுக்கு
ஈடு இணை ஆகிடுமா ஏதேனும்.?

தோட்டத்தின் மேற்கு மூலையில்
மூக்குத்துருத்தி வெடித்திருக்கும்
பருத்திப் பஞ்செடுத்து
கணவனுக்கும் தனக்கும் படுக்கை..!

எங்கள் ஓட்டுக் கூரைக்குப் பின்னுள்ள
இலவ மரப் பஞ்செடுத்து
மேனி வலிக்கக்கூடாதென்று
குஞ்சுகள் உறங்கிட மென்பஞ்சுப் படுக்கை..!

இவை கூடுகளா..?
மனதிற்கு நிறைவாய்
மரக்கிளைகளின்
மலர்ச்சியில் ஊஞ்சலாடும்
ஆகாயத்தொட்டில்கள்....!

வயலுக்குத் தண்ணீர் பாய்ந்து
வெளியேறிப் போகும்வரை
எல்லாவற்றையும் ரசிக்கும்
நான் ஏன் இன்னும்
தன்னம்பிக்கையின்றி
தனிமைப்படுத்தப் பட்ட
முயற்சி இல்லாத
மொத்த உருவமாய்..?

ஒருவேளை நீ கற்றுத்தரும்
ஒட்டுமொத்தப் பாடங்கள்
என்னைப்போலவே
எந்த மனிதனுக்கும்
தெரிவதில்லையோ..?
.

எழுதியவர் : க.அர.இராசேந்திரன் (18-Oct-15, 9:53 am)
பார்வை : 1092

மேலே