வெள்ளத்தனைய மலர் நீட்டம்

சிலபேர் புத்திசாலிகளாக, எல்லாவற்றிலும் முதலாவதாக இருப்பார்கள். சிலர் அவ்வளவு அறிவாளிகளாக இருக்கமாட்டார்கள். இது இயல்பு எனத் தோன்றும். தவறு!

சரி, உங்களால் என்ன செய்யமுடியும்? எதுவரை உங்களால் எம்பி உயரப் பறக்கமுடியும்? ‘இதுவரைதான் என்னால் முடியும்’ என ஒரு வரம்பு இருக்கிறதா? இல்லை, வானத்தை வில்லாகத் திரிக்க முடியும் எனக் கோட்டை கட்டுகிறீர்களா? உங்கள் எல்லை எதுவென எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கு ஓர் எளிய வழி இருக்கிறது. உங்கள் மனதில் என்ன முடியும் என நினைக்கிறீர்களோ அதை நிச்சயமாக அடையமுடியும்! இந்த இலக்கை அடைய முடியும் என நீங்கள் நினைத்தால் அந்த உயரத்திற்கு உங்களால் பறக்கமுடியும்.

எல்லாரும் சொல்வார்கள், ‘இலட்சியங்களை நோக்கிப் பயணிக்க வானம்தான் எல்லை’ என்று. இது கட்டிவிடப்பட்ட கதை! என்னவோ இப்படிச் சொல்லும்போது, ‘ஆகா! என்ன அறிவார்ந்த வார்த்தை!’ என எண்ணத்தோன்றும். உண்மையில், வானம்தான் எல்லை எனச் சொல்லும்போது நமது எதிர்பார்ப்புகள் ஓர் எல்லைக்குள்தான் இருக்கின்றன. அதைத்தாண்டிச் செல்லமுடியாது என நமக்குள் ஒரு கட்டுப்பாடு உண்டாகிறது. ஆனால், மனிதனின் உள்ளார்ந்த ஆற்றலுக்கு எல்லையே இல்லை. உங்களுடைய உண்மையான ஆற்றல் என்னவெனப் பார்ப்போம்!

முதலில், உள்ளார்ந்த சக்தி என்றால் என்ன? அது, ‘முயன்றால் உங்களால் ஆற்றக்கூடியது’. ஆனால், ‘உங்கள் முழு ஆற்றலையும் பயன்படுத்தவில்லை’ என அது சொல்கிறது! உங்களிடம் செய்து முடிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. ஆனால், நீங்கள் அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவதில்லை. கருவறையில் உருவாகும் சின்னக்கருதான் வளர்ந்து முழுமனித உடம்பாகிறது. உங்கள் மூளையிலிருந்து பாதம்வரை எல்லாமே அந்த சின்னக் கருமுட்டையிலிருந்து உருவானவைதான். அந்தக் கருமுட்டைக்குள் அவ்வளவு அளவிடமுடியாத சக்தி ஒளிந்திருக்கிறது.

அதேபோலத்தான் மனிதனின் மன ஆற்றலுக்கும் எல்லையே கிடையாது. அதற்குள்ள உருவாக்கும் சக்தி அளவிடமுடியாதது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாகின்றன மனிதன் தோன்றி. பல புதிய கண்டுபிடிப்புக்கள் வந்துவிட்டன. ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு எல்லை இல்லை. இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. இதுதான் எல்லையா? நாளைய புதிய கண்டுபிடிப்புக்கள் இதையும் ஒன்றுமில்லாததாக்கிவிடும்! நம் மனது உருவாக்கும் சக்திக்கு வானம்தான் எல்லை எனக் கட்டுப்பாடு விதிக்கமுடியாது. உங்களுக்குள் ஒரு பெரியசக்தி ஒளிந்து கொண்டிருக்கிறது. ‘எது நம்மால் அடையக்கூடிய எல்லை? நம்மால் எதுவரை பறக்கமுடியும்?’ எனத் தீர்மானிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்கள் மனதில், ‘இதை என்னால் அடையமுடியும்’ என ஒரு பட்சி சொன்னால், நிச்சயமாக உங்களால் அதை அடையமுடியும்! உங்கள் மனதே அந்த இலக்கை அடைய ஒரு வழியைத் தேடிக் கண்டுபிடிக்கும்! நெப்போலியன் ஹில் என்பவரும் இதையேதான் சொல்கிறார். "மனது, எதை உருவாக்கி அதனை அடையமுடியும் என நம்புகிறதோ, அதனை நிச்சயமாக அடையும்" எனச் சொல்கிறார்.
எல்லாம், நீங்கள் மனதில் நினைப்பதில்தான் இருக்கிறது. ஒருவருக்கு முடியவே முடியாது எனத் தோன்றுவதை, இன்னொருவர் மிக எளிதாக முடிப்பதும் மனதின் ஆற்றலால்தான். இதைத்தான் திருவள்ளுவர் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ எனவும்

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனைய(து) உயர்வு" எனவும் சொல்கிறார்.

நன்றி:‘தேவி’வார இதழ்

எழுதியவர் : முகநூல் (21-Oct-15, 11:07 pm)
சேர்த்தது : உலகநாதன்
பார்வை : 676

மேலே