சொல்லும் பொருளும்

காற்று வீச்சின் ஒலியாக
துலங்குகிறது சொல்
பறவைப் பொருளின்
சிறகசைப்பாய் சொல்.

பஞ்சவர்ணக் குதிரையின்
பாய்ச்சல் சொல்லாகவும்
செலுத்துபவன் பொருளாகவும்.

காற்றின் நறுமணமாகவும்
துர்நாற்றமாகவும்
சொல் பிரிந்து நிற்கிறது.

பொருள் நீர் சுரக்காத
சொல் மேகங்கள்
கலைந்து விடுகின்றன.

பொருளற்ற சருகுகள்
நொறுங்கிவிடுகின்றன.

கசிந்த வேர்வையைத்
துடைக்கும் காற்றாய்
கனிந்த சொற்கள்
பொருளை நிமிர்த்துகின்றன.

பனித்துளியாய் இருந்த
சொற்களின் பளபளப்பு
பகல் வெப்பத்தில்
உறிஞ்சப்படுகின்றன.

கூவும் குரலோசையும்
தாவும் நீரோசையும்
தீவில் ஒதுங்கிய
ஒற்றை மனிதனாய்
தவித்துக்கொண்டிருக்கின்றன.
பொதி சுமந்தது போல்
சுமந்த சொற்களின் கணத்தில்
பொருள்கள் நசுங்கி விடுகின்றன.

பொருள் பாரம் குறைந்த சொற்கள்
தடுக்கி விழுகின்றன.

இணை போல் சேரும்
சொல்-பொருள்
ஒன்றையொன்று தழுவிக்கொஞ்சி
சிலிர்த்துக்கிடக்கின்றன.

எழுதியவர் : கனவுதாசன் (23-Oct-15, 11:31 am)
Tanglish : sollum porulum
பார்வை : 58

மேலே