கைத் துப்பாக்கி
உளவியல் குட்டிக்கதை: கைத் துப்பாக்கி
கதையின் தலைப்பு: கைத் துப்பாக்கி
காவல்துறைக் கண்காணிப்பாளர் மகேந்திரன் தன் மனைவி சுஜாதாவைக் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதட்டத்தோடு பேசினார்.
"சுஜாதா, ஒரு முக்கியமான விஷயம்."
மனைவி இடைமறித்தார், "நீங்கள் கூப்பிடுவீர்கள் என்று தெரியும்.உங்கள் கைத்துப்பாக்கிதானே?"
"ஆமாம், அவசரத்தில் அதை வைத்துவிட்டு வந்து விட்டேன்.நம் வாண்டுப்பயல் கண்ணில் படுமுன் அதை எடுத்து உள்ளே வை!"
"அவன் கண்ணில் படாமல் இருக்குமா? எடுத்துக்கொண்டு சமையல் அறைக்கு வந்து, நீட்டி, ஹாண்ட்ஸ் அப் என்று சொல்லி விட்டான்"
"அடடா, அப்புறம் என்ன செய்து சமாளித்தாய்?"
"என்ன செய்திருப்பேன் - ஊகம் செய்து சொல்லுங்கள் பார்க்கலாம்?"
"கெஞ்சிப் பிடித்து - அதை வாங்கினாயா?"
"கெஞ்சுவதாவது - பிடிப்பதாவது! ஒரு அடி நகர்ந்தால்கூட, தெரியாமல் டிரிக்கரை அழுத்தி விட்டான் என்றால் என்ன செய்வது?"
"பிறகு எப்படி வாங்கினாய்?"
உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற அவள் உற்சாகமாகச் சொன்னாள், "ஏமாற்றி வாங்கினேன். என்னங்க..அவனைப் பிடிக்காதீர்கள் என்று குரல் கொடுத்தேன். நீங்கள்தான் பின்னால் வருகிறீர்கள் என்று நினைத்துத் திரும்பினான். பாய்ந்து சென்று அப்படியே அமுக்கிப் பிடித்து, வாங்கிவிட்டேன்.
மகேந்திரனுக்குப் பரம சந்தோஷம். இவள் அல்லவா காவல்துறையில் இருக்க வேண்டியவள் என்று நினைத்துக் கொண்டார்.