மழையின் நிமித்தம்

காலத்திற்கு ஏற்றார்போல்
காற்று தன் திசையை
மாற்றிக்கொள்கிறது
மழையைக் கொண்டு வரும்
சூல் காற்று மட்டும்
மேகங்களின் காதோரம் சென்று
செல்லமாய் கிசுகிசுக்கிறது

மகரந்தச் சேர்க்கைக்கு
காத்திருக்கும்
பூப்படைந்த பூக்கள் சில
வண்ணத்துப் பூச்சிகளின்
மொழியறியாது தவிக்கின்றன

தவளையொன்றின்
விரகதாபக் குரல்
தண்ணீர் பாம்பின்
பெரும்பசியைத் தூண்டுகிறது

சாளரத்தின் திரைச்சீலைகள்
மூடப்படும் போதே
குறிப்பறியும் விளக்கொன்று
வெட்கத்தில் கண்களை மூடிக்கொள்கிறது

எழுதியவர் : புதிய கோடங்கி (25-Oct-15, 9:01 pm)
Tanglish : mazhaiyin nimitham
பார்வை : 79

மேலே