அம்முவாகிய நான்

வீணை விதைக்கும் வழியெங்கும் பாதங்கள் செய்கிறது என் தனிமை...மெல்லிடை விலக்கிய கைகளில் குத்திக் கிழிக்கும் முட்களென... சொட்டும் நினைவுகளோடு ... நீண்டு குறுகி வளைந்து கலைந்து பரிதவிக்கிறது, என் வெளி...... மௌனங்கள் உடைந்து மீண்டும் மௌனமே பூசிக் கொள்ளும் ஒப்பனைக்குள் உன் பத்து விரல்களின் கூர் நகங்கள் பட்டுச் சிரிக்கும் சொர்க்கலோக வாசலின் பின் கதவாய் திகில் செய்கிறது விதி...விதி செய்ய சதி கொய்ய... மதி மெய்கள் தீண்டும்..தீண்டித் தீண்டி திட்டுகளின் சுவடுகளோடு சதை தொங்கும் ரத்தக் கனலின் தீரா நதியை நானே செய்கிறேன்..... நானே கொய்தது போல... சிறு மீனென சில்லிடும் செதிலோடு வாய் திறந்து நீர் இறைக்கும் நீ எத்தனை பெரிய தூண்டிலடி....!

எல்லாம் சரி.. எல்லாம் தவறு... எல்லாம் இல்லை..எல்லாம் இருக்கிறது... இப்படி எல்லாமும் எல்லாமுமாக இருக்கும் எல்லாவற்றிலும்.. எல்லைகள் மட்டும் உன் வாசல் திரும்பிக் கொண்டதில் சாயங்கள் போன நரியின் காடாய் திரிகிறேன்...... வெறும் சாயங்கள் கொண்ட பித்தங்கள் என்ற தரிசனக் காடுகளின் ஒற்றை மொட்டை மரம் வளர்க்கவே தலை ஆட்டுகிறது, என் கிளைகள்......நம் இரவுகள் ஆடை துறக்கும் இயக்கத்தின் சாயலை சார்ந்து நானும் ஒரு கனவை சுமந்தே சாகிறேன்..... சாவதும், செத்துக் கொண்டே இருப்பதும்.. செத்தாலும்.. இருக்கும் நீ சொல்லும் வாழ்வு. உன் முகம் கண்ட என் அகம்....எதிர் எதிர் திசையில் எங்கும் இல்லை. என் வழி சொல்லும் மரணத் திசைக்குள்....திசுக்களின் கடவுளென உன் உடல்..... உயிர் சுமந்து திரிகிறது..... தூவும் மழையென உன் நிர்வாண சலனங்களில் நானும் ஆதாம் என்றே திருட்டு கவிதை எழுதுகிறேன்..... நீ கொண்ட முகமூடிக் கனவுகளை கிழித்து கிழித்தே கொலைகாரனாகிப் போகும் விடியல் நான்....

செவ்வரிக் காலங்களின் தீப்பிடித்த கருக்களின் வாசத்தோடுதான் உன் கூந்தல் தேடும் பறவையாக...வீறிட்டு அழுகிறேன்.... அழும் சிறு குழந்தையின் தூக்க சிரிப்புக்குள் கன்னக் குழியாக புதைந்தே உன் நிறம் விதைக்கிறேன்.... நான்... நான் என்ற ஒற்றை வார்த்தை அற்ற பொதுவுக்குள் காடு மலை தாண்டிய தூரத்து இல்லாமை நீ.. நிலவைத் தின்று கொன்று அல்லது பகலை பிடித்து சிறை செய்த மாதவத்தின் வேர் நீளும் மாயப் புழுவின் வாசலில் நான் புள்ளிகள் செய்த கோலம் அழிக்கிறேன்......

தீர்த்த கரை இல்லா குளத்தின் நடுவே... மூழ்கும் தாமரையின் வண்ணக் கனவுகளின் நீட்சியாக உன் முக யோசனை... தேவதைக் கனவில் தேடலின் விதியாய் அத்து மீறல் உன் புன்னகை ...நீ திரும்பிய நொடிகளுக்கு முந்தைய யோசனையை தூரத்தில் மறைத்து விட்ட நொடி காட்சியை படம் பிடித்த சிறு மூளை நினைவுப் பகுதி முழுக்க உனைப் போலவே......திசை மறந்த இருட்டின் நிரவல் என்று அலறும் எதிரொலியின் தொண்டைக்குள் குத்தாமலும் முள் ஆகிறது... பிரிவு....உயிர் பலிகளில் பீறிடும்... ரத்த சகதியில் உன் நெற்றி பொட்டின் நிறம் மறக்கிறேன்... எங்கிருந்தும் வருவதில் நீ தான் பயணம்.. எங்கிருந்தும் செல்வதில் நீ தான் மரணம்....

புரியாத புதிரின் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே போவதில் நான் புதிர் தேடி மிரள்கிறேன்... உனைத் தேடும் பொழுதெல்லாம் நீ ஆகி பிறழ்கிறேன்..பேரிரைச்சல் சப்தங்களின் சிறு மௌனம் உன் குரல்.... தெரியாத யுத்தங்களின் பெரும் அழுகை உன் நிழல்....யாரிடமும் பகிராத கேள்வி ஒன்றாய்... பதில் தொலைத்த இருண்மைக்குள் நானும் ஒரு நகுலனின் மறதி ஆகிறேன்.... கதைகளின் பாத்திரங்களின் இசைக் கோர்ப்புகளின் நிமித்தம் என் அழுகை தீர்க்கம் பெற்று யாரும் கானா கரைதலாய் போயே விடுகிறது....நினைவுக் கதம்பங்களின் கதகளியின் மென் பாத முற்கள் என உன் விழியோசை..... இசை மீட்டும் காற்றாட்டு கரையோரமாய் மிதக்கும் அடையாளமற்ற பிணமாகி போகிறது என் காதல்....பந்தி வைத்த வீட்டுக்காரியின் பட்டினியை நிறைத்து குமிழச் செய்யும்... சிறு தானிய தவமாகி நிற்கிறது... இயலாமை..... வா என்று சொல்லும் வராமல் போன வார்த்தைக்கு பின் கண்ணாடிஉடைத்தே பிம்பம் நிறைகிறது.. கானம் சொல்லும் கானகக் குயிலின் நிறக் குரலுக்கு வானவில் பெயர் சூட்டிப் போகிறது உன் தாவணிக் கனவுகள்....இசை வாட்டும் பின் மதிய அமானுஷ்யக் கீறலில்... பசை ஆகும்.. உன் பச்சரிசி சிரிப்புகளின் ஆசை நொடிகள்..... ஆகட்டும் என்ற தலை ஆட்டும் பொம்மையின் ஆதாரத்தோடு அடித் தொண்டை நிரவும் விரல்கள் எனதான விடியலில் நிறமாகி வழிகிறது கனவும்....

ரசவாத மாற்றத்தில் பௌதீக ஆக்கங்கள்... வேதியியல் செய்தே உயிரியல் காக்கும்.... காப்பதைக் கடந்த அரிவாளின் வீச்சுக்குள்... ஊர்க் கோடி கடவுளும்... உனதறையில் தவம் செய்வான்...பெருங் கண்கள் கொண்ட வட்ட உளி மெல்லும் பார்வையில் சிறு விண்மீன் துகள் என தீர்ந்தும் தீராத பின்னிரவின் நகங்களை கடந்தே கடித்து துப்பும் கனத்த உதட்டில் ஒட்டிக் கொண்டே நிற்கிறது.. ஒரு துளிக் கவிதை.. அல்லது ஒரு துளி விஷம்.. அது சொல்லும் அல்லும் பகலும்.. கல்லும்.. மலரும்....ஆத்திரக் கார ஆகாய நெருப்புக்குள் உன் மடி நெம்பும் என் ஜவாலைத் தழுவல்கள்.... மனம் புதைக்கும் குளிர் ஊற்றும் உன் உயிர் தூக்கல் எனதின், அமிர்தக் கடல் விதைத்த கதையை எங்கனம் சொல்வேன்.. சொன்னாலும்.... அற்றதாய் சொல்லிய வனமெங்கும்... என் தூங்காவனமும்.... உன் தேக மணமும்.....

தலையணைக்குள் புதையாத முகம் தேடித் திரியும் என் இரவு அறைக்குள் யாருமற்ற உன் குரல் மாயங்களின் பரண் தேக்கம்..... சாதம் பொங்கும் வாசத்தில் உன் மார்பு தாங்கும்...இரட்டைக் கிளவி.....அள்ளி அணைத்திடும்... பெருங்கூச்சல் முனங்கல் தலை திமிரும் முயல் தேசங்கள்.... சிவப்பை கடந்த இதழில் திரிகள் எரியும் சுழல் ஆகி.. வருடல் விதைக்கும் நம் தனிமைச் சிறகுகள்....விரல் கோர்த்த நாட்களின் நுனி கொண்டே தைத்திரு, உன் கலைப் பொருள் செய்யும் ஞாபகத்தில் நானும் ஒரு பொம்மை என்றே......குளிரூட்டும் மின் சாதனக் கைகளின் வளையலாய் சிலிர்க்கட்டும்.. நம் தூரங்கள்....நிலவைப் பிராண்டும்... உன் அலைபேசி கொஞ்சல்களின் என் மார்பு முடி கொஞ்சம் பிய்த்து வீசிய ஞாபகங்களை எங்கு கொண்டு புதைக்க.... அல்லது... எதைக் கொண்டு நிறைக்க.... நித்தம் யுத்தம் கடந்த மௌனத்தில் நம் பிரிவு நாட்கள் போனது வாழ்வின் மரணம் தேடி.... புழுக்கள் நெளியும் மனதுக்குள் பெரும் பாம்புக் கடியோடு கத்திச் சாகும்.. துணிச்சல் எனக்கு மட்டும் தானடி..... அடி பெண்ணே.....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (2-Nov-15, 12:44 pm)
Tanglish : ammuvakiya naan
பார்வை : 101

சிறந்த கட்டுரைகள்

மேலே