நிலத்தினும் பெரிதே… வாழ்வினும் உயர்ந்தன்று

நிலத்தினும் பெரிதே… வாழ்வினும் உயர்ந்தன்று
------------------------
எட்டு வச்ச காலுக்கு கீழ நெலம் வழுக்குன மாதிரி கனாக் கண்டு முழிச்சனைக்கு காலையில தான்…

“”சேலத்துல இருந்து சங்ககிரி போற ரெண்டு வழி தடத்த நாலு வழித் தடமா அகலப்படுத்த அரசாங்கம் முடிவு பண்ணியிருக்கு… அதுக்காவ இந்த நல்லராயன் பாளையம் கிராம இட்டேறி பொறம்போக்கையும், அதனோட ஓரஞ்சார வெவசாய நெலங்களையும் நட்ட ஈடு குடுத்து அரசாங்கமெ எடுத்துகிறதா அறிவிச்சிருக்கு. இதனால பாதிக்கப் படறவங்க இருந்தா ஒரு வாரத்துல கலெக்டராபீசுல சம்பந்தப்பட்ட அதிகாரிங்களெப் பார்த்து மனு கொடுக்கலாம்”னு தலையாரி பறை போட்டு சொல்லீட்டு போனான்.

கண்ட கனா பலீச்சிருச்சே… உழுது… உழுது வாழ்ந்த வாழ்க்க இப்பிடி கழுத பொறண்ட களமாச்சே…னு வேகுவேகுனு ஓடி அங்க பார்த்து, இங்க பார்த்து ஆபீசருங்க கால புடுச்சி இன்னைக்கி இல்லீனாலும் என்னைக்காவது மழ தண்ணி பேஞ்சி பயிரு வெளையும் பசியாறலாமுன்னு நீசதண்ணியில உசுர வளத்து கெடந்தமெ சாமீ… வெளையீர நெலத்த வெடுக்குனு புடுங்கீட்டா எங் குடும்பம் எங்க போயி நிக்குமுனு மன்னாடிப் பார்த்தேன்… மனு குடுத்துப் பார்த்தேன் ஏதும் புரோசனமில்லீங்க.

தேவப்பட்டா எந்த நெலத்தையும் எடுத்துக்க அரசாங்கத்துக்கு உரிம இருக்குதாமெ… எனக்கு தெரியாதுங்க… அங்க… ஆபீசருதான் சொன்னாருங்க.

நல்லராயன் பாளையத்துல செம்பாதிய எடுத்துகறதா உத்தரவானதுக்கு பொறவு எங் கையளவு நெலம் எம்மாத்தரம்?….. “ஒரலுல அகப்பட்டது ஒலக்கைக்கு தப்புமாங்க’

இட்டேறி ஓரமா வண்டி மாடு கண்டு போயி வார எசவா இருந்த இந்த நெலத்த வெச்சித்தான் எங்கையன் தம் பொழப்ப உருட்டி பொறட்டுனாரு.

எப்பவுமெ காஞ்சிக் கெடக்கும்… எப்பவாவது பேஞ்சிம் போவும் மழய நம்பித்தான் இந்த மண்ணு. ஒரு பட்டம் வெளஞ்சா ஒம்பது பட்டம் தவறிப்போவும். பருவம் தப்பிப்போன பொழுதுக்கு கோமணத்துல முடிய அப்பப்ப அவருக்கும் ரெண்டு காசு வேணுமில்லெ… வெள்ளாமெ இருந்தா காட்டுல பயிரு பச்சைகளுக்கு பண்டுதெம் பாப்பாரு, இல்லீனா… மரமேறி நொங்கு, எளநீ எறக்கி வித்துட்டு வருவாரு.

இந்தப்பாடு இப்பிடி போயிகிட்டிருந்தப்பதான்… ஒரு நா மரத்துல ஏறுறப்ப காலு தவறி உழுந்து பொடனி கத்திரிச்சி பொசுக்குனு போயிச் சேர்ந்தாரு. எல்லாருக்கும் மண்ணுல சாவுன்னா… அவுருக்கு சாவு மரத்துலன்னு எழுதி வச்சத யாரு மாத்த முடியும்

உசுரு போறப்பகூட நெனச்சிருப்பாரு… “தாங் காப்பத்தலைனா என்ன… எங் கொலத்த இந்த மானம் பார்த்த பூமி காப்பாதீரு’முன்னு.

அதுவும் போவ, “ஓரோரு அறுப்புக்கும் ஒரு உக்கழுத்து செயினு பண்ணிப் போடுவான் எம்பையன்’னு வீராப்பு பேசி பெரிய சீரகாபாடியில இருந்து ஒருத்திய கட்டி வெச்சாரு.

வாக்கப்பட்டு வந்த மவராசி பாய விரிச்சி பாதகமில்லாமெ எனக்கொரு புள்ளையெப் பெத்துப் போட்டா. பொறந்த பொட்டையும் அது தீட்டுக்கு வெக்கிற வரைக்கும் கூலிவேலைக்குப் போயி குடும்பத்தோட ஒத்தக்கால தாங்கிச்சி.

குந்தின புள்ளைய எத்தனை நாளைக்கி தான் கூடவே வெச்சிருக்கிறது…

எனக்கும் பொறவு… இந்த நெலத்துக்கு ஆசப்பட்டகருமத்தம்பட்டி மருமவனுக்கு, தையில மண்ணக்காட்டி கண்ணாலத்தையும், பொறவு வந்த ஆடிக்கு மனைய வெச்சி அர பவுனும் பண்ணிப்போட்டேன். ஆடிப்பட்டம் வெளையும்… அடவ மீட்டுடலாமுன்னு.

“செரைச்சாலும் தலையெழுத்து போயீருமா?’ங்கறாப்பள…கடன ஒடன வாங்கி ஆடி ஒழவு ஓட்டி, கடலக்கொட்ட ரகம் பார்த்து மானாவாரியா வெதச்சி வரப்பு ஏறறத்துக்குள்ள அடிச்சு பேஞ்ச மொத மழயில கடலச் செடிங்க திமு திமுன்னு பச்சக்கட்டி நின்னத பாத்து, “பகவான் கண்ண தொறந்துட்டான்’னு நெனச்சேன். ஆனா, அந்த ஒரு மழயோட செரி… பொறவு மழயே இல்ல. பட்டந்தவறிப் போவ… கடலச்செடிங்க காட்டுலயே காஞ்சி கருவாடா போச்சி.

அப்ப உழுந்த கடன்தான்…

பட்டந்தவறி போனாலும்… பருவ மழ தள்ளிப்போனாலும் பட்ட கடன் இல்லீன்னு போயீருமா

கடனு… கடனுக்கு வட்டி… வட்டிக்கி குட்டின்னு ஏறிப்போவ, கடன் குடுத்த பெரிய மனுசன் கழுத்துக்கு துண்டு போட வந்துட்டா ஊருக்குள்ள உசுர வெச்சிகிட்டு இருக்க முடியுமாங்க

அதான்…நெலத்த எடுத்துகிட்டு பணத்த கொடுக்குறோமுன்னு கவருமெண்டு சொன்னதும்… நெலமில்லாட்டியும் பரவாயில்ல… மானத்தோட வாழுவோமுன்னு நீட்டுன காயித்தாத்துல ரேகெ உருட்டி கடன தாட்டி உட்டுடேங்க. எரவ சீலையெ நம்பி இடுப்புக் கந்தய வுட்ட மாதிரி. இப்ப கடனும் போச்சி… நெலமும் போச்சி.

கடனுக்கு போவ கா காசு மிஞ்சலீங்க.

காயிதத்துல ரேகெ உருட்டனத்துக்கும் பொறவு பாருங்க… சும்மா ஆறு மாசத்துல நெகுநெகுன்னு போட்ட ரோட்டுல டவுனு வண்டிக எல்லாம் சர்ரு புர்ருனு பறக்குது.

அங்க தான் அப்பிடின்னாக்க… இங்க எம்பொழப்பு “சீ’ன்னு ஆயிடுச்சி…

“இட்ட ஒறவு எட்டு நாளைக்கு, நக்குன ஒறவு நாளு நாளைக்கு’ங்கறாப்பள, நெலத்துக்கு ஆசப்பட்டு என் புள்ளைய கட்டுன மவராசன், நெலமில்லைனு தெரிஞ்சதும் நலுங்காமெ… குலுங்காமெ… நல்லமேனிக்கு புள்ளைய கொண்டாந்து அப்பன் வூட்லயே கெடடீன்னு உட்டுட்டு போயீட்டான்.

இப்பவெல்லாம் பாத மேல போற பட்டணத்து வண்டிங்கள பாக்கறப்ப, அதுக எம் பொழப்பு மேல ஏறீன மாதிரியே நெனச்சுகுவேங்க.

ம்…விதி இப்பிடீன்னு இருக்கறப்ப யாரப் போயி நொந்துக்க முடியும்

வாழாவெட்டி புள்ளையையும்,வாக்கப்பட்ட பொண்டாட்டியையும் கூலிக்கு போவ உட்டு குந்தனாப்ல திங்க, புருசன் நாவொன்னும் வக்கத்து போவலயே

வாக்கப்பட்டு போன புள்ளைக்கு வகைவகையா செய்யத்தான் முடியல…வாழ்ந்து கெட்டு வந்த பொறவும் வவுத்துக்கும் நல்ல கஞ்சி ஊத்த முடியல…. அதுக்காவ… நம்பிவந்தவள நட்டாத்துல உட்டுட்டு நாந்துக்கவா முடியும்

உசுரு இருக்கற வரைக்கும் ஒழைச்சுத்தான் பாப்பமெ

அதா… அங்க தெரியிதே… நாலு மூங்க நெட்டு பனஓல போட்டு …அதான் எங்குடிச. உழுத மண்ணும் பொறம்போக்கா போச்சி… இருந்த பொழப்பும் ரோட்டுக்கு வந்தாச்சி…

அண்ட அந்த குடிச இருக்குது… கூழுக்கு…

ஓடிப்புடிச்சி எளவட்டாமா திரிஞ்சப்ப நட்டுவகாரன் புள்ளைக்கு கொட்டிக் காட்டனுமாங்கறாப்ள எங்கையன் கூடமாட போயி வாரப்ப தென்ன பன ஏற கத்துக்கிட்டது…. “”கையெடுத்து நாங் கும்புடுற கடவுளு கைவுட்டாலும், காலெடுத்து நாஏறன கரும் பன கையுடுலீங்க”

பூம்பாளையில பக்குவமா பதனீ எறக்கி பான சட்டியில சுண்ணாம்பு தடவி புளிச்ச வாட வாராமெ கோட வெயிலுக்கு எதமா சாப்புடுறீங்களே… இது தான் எங்க மூணு சீவனுக்கும் ரெண்டு வேள கூழு வூத்துது.

பாவம்… நீங்க என்ன பண்ணுவீங்க… டவுனுகாரங்க, படிச்சவங்கெ… பவுசா பிளசர் கார்லெ போறப்பெ ஆசப்பட்டு ஒரு வா பதனீ சாப்புட எறங்கிட்டீங்கெ. எம்பாட்ட ஒங்ககிட்ட சொல்லி என்னத்தப் பண்ண?

ஏதோ,ஒங்களப்போல எங்கையோ போற மவராசரு எங்கடைய பார்த்து ஒரு முழுங்கு பதனீ சாப்புட வாரதாலதான் எம் பொழப்பும் ஓடுது.

போற வேலைய சௌரீயமா முடிச்சீட்டு திலும்பி வாரப்ப இங்க வந்து ஒரு வாயி பதனியோ நாலுகுழி நொங்கோ சாப்டுட்டு போங்க அப்பதான் என்னூட்லேயும் அடுப்பெறியும். கோடி வித்தையும் கூழுக்கு தானுங்களே

அதெல்லாஞ் செரீ… இந்த வெய்ய சீசனுக்கு ரோட்டோரமா நொங்கு கட போட்டுட்ட… வேச காலம் போன பொறவு என்ன பண்ண போறேன்னு கேட்கிறீங்களா…

“காலஞ்செய்யிறத ஞாலமும் செய்யாது’ன்னு சொல்லுவாங்க… எஞ்சாவு எங்கையோ…எந்த பனையிலன்னு எழுதி வெச்சிருக்கொ யாருக்குத் தெரியும் அப்பிடித்தான் எம் பொழப்பும் முன்ன…வெவசாயம்… இப்ப…நொங்கு யாவாரம்… மறுக்கா… யதாவது இல்லாமலேயா போயீரும்?

எல்லா உசுருக்கும் மறு வேளைக்கின்னு ஒரு கவளம் எங்கையோ எழுதி வெச்சிருக்கும்க. மறு வேலைக்கி எங்க…எங்கன்னு சாகறவரைக்கும் சங்கடப்பட்டா வாழரது எக்காலம்

சுருக்கா சொல்லனுமுன்னா… வாழ்க்கைங்கறது என்னான்னு நெனைக்கிறீங்கெ… வேற ஒன்னுமில்லீங்கெ “நம்பிக்க’தானுங்கெ.

என்ன நாஞ்சொல்றது செரி தானுங்களே?

எழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (3-Nov-15, 9:46 pm)
பார்வை : 42

மேலே