தொணதொணப்பு
கத்திரிக்காய் பொரியலும்
காரமாய் கேரட் குழம்பும்
கண்மணி சமையல் வாசம்
கணவன் அதிரடி பிரவேசம்
காந்துகிறது கத்தரி காருகிறது
கவனியாமல் காரியம் என்னதிது
காஸ் அணை அணை கண்ணில்லை
கருகுவது கூடவா தெரியவில்லை?
குழம்பை ஏன் கொதிக்க விடுகிறாய்?
கொஞ்சம் சூட்டை உடனே குறை
உப்பை ஏன் இப்போதேடுக்கிறாய்
உள்ளே அப்படி என்ன தேடுகிறாய்
குழைந்தது சாதம் இறக்கு இறக்கு
குழம்பில் கொஞ்சம் பருப்பை கூட்டு
கரைசல் புளி ஏன் தண்ணியாயிருக்கு
காய்ந்த மிளகாய் வேண்டாம் ஒதுக்கு!
சதிக்கு எதுவும் புரியவில்லை
சாத்தான் பதியை ஆட்டுகிறதோ
சத்தம் ஏன் சும்மா போடுகிறீர்?
சம்பந்தமின்றி ஏன் உளறுகிறீர்?
என்ன தெரியும் இங்கே உமக்கு
என்ன ஆயிற்று இன்றைக்கு
சாதாரண சாம்பார் வைக்க
சமைக்க எனக்கு தெரியாதா?
அவன் சொன்னான் அப்படிச் சொல்
அது எனக்கும் தெரியும் ஆனால்
அனுதினம் நான் காரோட்டுகையில்
அன்பே நீ தொணதொணத்தால்
இப்படித்தானே கடுப்பாயிருக்கும் !
(படித்த ஜோக்கின் தாக்கம் !)