உரிமைகள் பறிக்கப்படும்
விதிகளை மறந்துவிட்டு
சதிகளை திறந்து விட்டு
பேச்சுவார்த்தைக்கு அழைத்து
மூச்சுக்காற்றை நிறுத்தி
முரசறையும் முன்னே
சிரசறிந்து
குழியிலிருந்து கொண்டே
பழி தீர்த்துக்கொண்டு
வெடிகளைப் புதைத்து வைத்து
நொடிகளில் கொன்று
வெள்ளை கொடி வைத்திருப்பவனையும்
கொள்ளை நோய் போல் தாக்கி
ஆள நாடு கேட்டவனோடு
வாழ வீடு கேட்டவனையும் கொன்று
மண்ணுக்காக சண்டையிடுபவனை
விண்ணிலிருந்தே வீழ்த்தி
அடைக்கலம் என்று கூறி
அடக்கம் செய்து
அழுகவே துணை இல்லாதவனை
உலகத்துணையுடன் உயிரெடுத்து
தம்பியின் மகனைக் கொல்ல
அண்ணன் ஆயுதம் வழங்கி
ஒதுங்கி வாழ்பவனையும்
ஓடி ஒளிபவனையும்
தேடி போய் தீர்த்துவிட்டு
கை கட்டி
கண் கட்டி
ஆடை களைந்தெறிந்து
ஆண்களிடம் ஆயுதத்தையும்
பெண்களிடம் ஆண்மையையும் காட்டி
உணர்வுகள் பறிக்கப்படும்
உயிர்கள் பறிக்கப்படும்
உரிமைகள் பறிக்கப்படும்