வின் ஞானம் - நிறுவன ஆண்டு நிறைவு விழாப் போட்டிக்கு
********************
வின் ஞானம்!
********************
இவ் வார்த்தைகளை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்களோ, அதன் படியே கவிதை எழுதுங்கள் என்று தளம் எங்களுக்குச் சுதந்திரம் கொடுத்திருக்கிறது.
அதன் படி, வின் ஞானம் என்பதை நான். வின் (WIN ) ஞானம் (வெல்லும் அறிவு) என்று புரிந்துகொண்டு கீழ்க்காணும் கவிதையை எழுதியிருக்கிறேன்.
தனதன தனதான - தன
தனதன தனதான
வயதொரு தடையில்லை! - கல்வி
வாய்ப்பொரு தடையில்லை!
வறுமையும் தடையில்லை! - நீ
வாழ்க்கையில் உயர்வதற்கே!
மனமது தெளிவானால் - நல்ல
மார்க்கங்கள் புலனாகும்!
செயலது சிறப்பானால் - நீ
ஜெயிப்பது நிஜமாகும்!
வறுமையில் பிறந்தாலும் - வாழ்,
மனதினில் ராஜாவாய்!
வயதினில் முதிர்ந்தாலும் - வாழ்,
மணமுள்ள ரோஜாவாய்!
படித்தவர் எல்லாரும் - இங்குப்
பதவிகள் பெறவில்லை!
துடிப்புள்ள கல்லாரும் - இங்குத்
தோல்விகள் பெறவில்லை!
எல்லாந் தெரிந்தாரும் - இங்கு
யாரும் கிடையாது!
ஒன்றும் அறியாரும் - இவ்
வுலகில் கிடையாது!
உனக்குள்ள திறமையைi - நீ
உணர்ந்ததில் முதன்மைசெய்!
உயர்வது அதனாலே - என
உள்ளத்தில் உறுதிவை!
திறமைகள் இருந்தாலும் _ பலர்
உயர்வது கிடையாது!
குறை,அவர் குணம்;மேலும் - மனக்
கோழைக்கு உயர்வேது?
கனவினில் மிதப்பார்கள்! - வாய்ப்பைக்
கண்டதும் கெடுப்பார்கள்!
தோல்வியில் சுருள்வார்கள்! - மீண்டும்
தொடர்ந்திட மிரள்வார்கள்!
சிலருக்கு முன்கோபம்! - இன்னும்
சிலருக்குச் சந்தேகம்!
சிலருக்குச் சபைக்கூச்சம்! - இன்னும்
சிலருக்குத் தலைவீக்கம்!
பலர்கடும் சண்டைக்கோழி! - இன்னும்
பலருக்கு மண்டைகாலி!
பலருக்கும் தாழ்வுணர்ச்சி! - இன்னும்
பலருக்கு மிகையுணர்ச்சி!
குடியினால் சிலர்தாழ்வார்! - இளங்
குமரியால் சிலர்வீழ்வார்!
விதியினைப் பலர்நோவார்! - கடும்
விரக்தியில் பலர்சாவார்!
குறைகளைச் சரிசெய்வாய்! - நீ
கொள்கையில் பிடிகொள்வாய்!
மனிதர்கள் மனம்வெல்வாய்! - வரும்
வாய்ப்பினை எதிர்கொள்வாய்!
திட்டத்தைச் செயலாக்கு! - நீ
தெய்வத்தைத் துணையாக்கு!
கஷ்டத்தை வரவேற்று - உன்
கடமையில் பணியாற்று!
ஆரம்பத் தவறாலே - நீ
அதைரியப் படவேண்டாம்!
சீர்செய்த பின்னாலே - நீ
ஜெயிப்ப்தை விடவேண்டாம்!
போட்டியை முடமாக்கு! - உன்
புத்தியைத் திடமாக்கு!
புதுமைகள் உருவாக்கு! - வரும்
புகழ்,பொருள் உரமாக்கு!
லட்சியம் எதுவானால் - என்ன?
நிச்சயம் நிறைவேறும்
தத்துவம் இதுவாகும்! - இது
தரணிக்குப் பொதுவாகும்!
இருப்பது மிகக்கீழே! - நீ
நினைப்பது மிகமேலே!
ஊக்கத்தின் விளைவாலே - நீ
உயர்ந்திடு மனம்போலே!
**************************************************************
- இது என் சொந்தப் படைப்பே என்று உறுதி கூறுகிறேன்!
_ ராஜமாணிக்கம்.