அழகாய் நிதம் பாடுவோமே காப்பியக் கலித்துறை

அன்பாய்த் தொழுதால் அணைப்பாள்பரி வாக நாளும்
இன்பந் தருவாள் ; இதமாய்ச்சுகந் தந்து, வந்த
துன்பந் தொலைத்துத் துணையாயிருப் பாளை வாழ்த்தி
அன்னை புகழை அழகாய்நிதம் பாடு வோமே !

மேற்கண்ட பாடல் "காப்பியக் கலித்துறை" ஆகும். இதற்கு "வண்ணக் கலித்துறை ", "விருத்தக் கலித்துறை " என வேறு பெயர்களுமுண்டு.
'ஓரளவு சந்தமிருப்பதால் வண்ண விருத்தம் என்றும், காப்பியங்களின் கதைமாந்தர்களின் உணர்வுக்கேற்ற வீச்சுக்கு உதவுவதால் காப்பியக் கலித்துறை என்றும் பெயர் பெற்றது.
பொது இலக்கணம்.
*ஓரடிக்கு ஐந்து சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து, (பாடலின் சந்தம் கருதி மோனையை எந்தச் சீரிலும் கொள்ளலாம்.
* ஓரடிக்கு "தேமா, புளிமா, புளிமாங்கனி, தேம, தேமா " என்னும் சீர்வரையறையைப் பெற்றும்,
*நான்காம் சீர் "தேம " என்றது, குறிலீற்றுத் தேமாச்சீர் மட்டுமே வரல் வேண்டும். குறில் ஒற்று, நெடில், நெடில் ஒற்று ஆகிய தேமா வரலாகாது.
* அடிதோறும் ஒரே எதுகையைப் பெற்றும்,
*புளிமாங்கனிச் சீரை நன்கு கவனிக்கவும். தனதானன என்று நெடிலை நடுவில் கொண்ட புளிமாங்கனிச் சீரைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரம் இருப்பின் நன்று. இல்லையெனின் எப்படியும் முடியலாம்.
இந்த வரையறைகளைக் கொண்டு
வருவது "காப்பியக் கலித்துறை " எனப்படும்.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Nov-15, 3:24 pm)
பார்வை : 103

மேலே