அன்றாடம்

பாவி மனுஷா?
நல்லா இருப்பியா நீ?
கூந்தல் பிடித்து எட்டி உதைபட்டு
மூலையில் விழுந்த அம்மாவின் புலம்பல்..
தெறித்து விழுந்த
நெகிழிப் பையிலிருந்து
அரிசி, பச்சைமிளகாய்
இத்யாதி பொருட்கள் சிதற...
தரையில் கிடக்கும்
நாலுமாத தங்கச்சிப் பாப்பாவின் அழுகை;
லுங்கியை மடித்துக் கட்டி
காலி டப்பாக்களை திறந்து
விசிறியடிக்கும் அப்பா..
எப்படியும்
சாமி படத்துக்குப் பின்னால்
அம்மா வைத்திருக்கும்
காசை கண்டு பிடித்து
மீண்டும் ஒரு உதை கொடுத்து
வெளியே செல்லப் போகிறார்..
போனவுடன் –
குரைத்துக் கொண்டிருக்கும்
சுப்பிரமணி நாய்குட்டி
முந்துவதற்கு முன்னமே
அம்மா கொண்டுவந்த
பையிலிருந்து எகிறி
மண்தரையில் கிடக்கும்
பொட்டலத்திலிருந்து
எட்டிப் பார்க்கும்
அந்த இரண்டு வடைகளை
ஓடிப்போய் எடுத்துக் கொள்ளவேண்டும்..
அப்பாவின் காலடிபட்டு நசுங்காவிட்டால்..
கண்ணில் நீர்தழும்ப
பார்த்து கொண்டிருந்தான்
சின்ன ராசு..

எழுதியவர் : ஜி ராஜன் (21-Nov-15, 1:30 pm)
Tanglish : anradam
பார்வை : 70

மேலே