காதலின் தென்றலே
மதமதப்பு ஆடைகளையும்
போர்வைகளையும்
காது மூடிய தொப்பிகளையும்
அணிந்துகொண்டு திரியும்
மனிதர்களைப் பார்க்கும்
இந்த மார்கழியில்
பனித்துளி சுடுகிறது.
வீடுகள் மூழ்கி
பாதைகள் குளமாகி
வாழ்வியல் பாதிப்புக்குள்ளான
இந்த மழைக் காலத்திலும்
தீப்பிடித்து எரிகிறது என் காடு
வார்த்தைப் பொக்கிசத்தை
மௌனத்தின் பூட்டால்
பூட்டிக்கொண்டு தைரியமாய்
சிலுத்துக் கொண்டுலவும்
உன் உதடுகளின் திமிரால்
அலுத்துப்போகிறது மனசு
தூங்குகின்ற பாவனையில்
எழுந்திருக்க அடம்பிடிக்கும்
விழித்திருக்கும் குழந்தையாய்
உனக்குள்ளிருக்கும் காதலானது
எனக்குள் தினசரி கானலாகுது ..
வாலிபத்தின் முற்றத்தில்
ஓடி விளையாடும்
காதலின் தென்றலே
காவியத்தின் மேடையில்
கைகோர்த்துத் திரிந்திட
காலமெது கூறடி.?
*மெய்யன் நடராஜ்