பிரம்மக் கோளாறு-4

வலைப்பின்னல்களின்
அந்திம முடிச்சுகளில் தொக்கி நிற்கும்
அழுத்த ரேகை கோடுகளாய்
வாழ்க்கை நகர்கிறது.

வருபவன் முகமும்
கடப்பவன் முகமும்
கணிக்க முடியவில்லை யாரென்று .

முகமூடிகளின் திரை விலக்கவும் முடியாமல்
வேக நடைகளில்
வேதாள உலகத்தில்
விரைவுப் பயணம் தொடர்கிறது.

கொலுசு தடங்களில்
கை ரேகைகளையும்
கடிகாரத்து மணிக்கட்டுகளில்
கொலுசின் அடையாளங்களையும்
கண்டு பிடிக்க
காலங்களை விரயம் செய்து
கரையோரத்தில் கப்பலோட்ட
காத்துக் கிடக்கிறார்கள்.

இவர்களின் பேட்டையில்
சூரியன் மேற்கில் உதித்து
கீழ்த்திசையில் மறைகிறான்.
ராச்சந்திரன் வருவதே இல்லை.

மதுக்கிண்ண தாழ்வாரங்களில்
மிஞ்சிப் போனவைகள்
மிகப் போதை கொண்டு
மனிதன் எங்கே என்று தேடுகின்றன .

காதோரம் நரை விழுந்த பழங்களும்
யாதொரு போதையுமில்லாமல்
மயங்கிக் கிடக்கின்றன
மறுபடி சூரியன் கிழக்கில் உதிப்பானென்று
மறுபடி சந்திரன் ராவில் வருவானென்று.

எழுதியவர் : சுசீந்திரன் (25-Nov-15, 12:37 pm)
பார்வை : 80

மேலே