இனி இப்படித்தான்
நான் தொலைந்து விட்டேன்...
உன் உலகத்திலிருந்து வெகு தூரம் கடந்தும் விட்டேன்
ஒரு வேளை என்னை தொலைத்த இடத்தில் நீ தேடி வந்தால்
இதோ உனக்காக நான் விட்டு செல்லும் குறிப்பு...
நீ தேடும் இடத்தில் நான் இன்று இல்லை
நீ என் பின்னோடு பேசும் வேளை
நான் முன்னோக்கி சென்று விட்டேன்
நீ இனியும் என் புறம் பேசுவாய்
அதை கேட்க என் முதுகிற்கு காதில்லை
இனி நிற்க எனக்கோ நேரமில்லை
என்னை நாமாக்கி
நம்மை யாவருமாக்க
நான் விழைந்தேன்
நீயோ என்னை நீயாக்கி
என்னிடமிருந்தே என்னை பிரித்தாய்
என் முயற்சி ஒரு துரோகம் என்றால்
நான் செய்ததோ பெரும் பாவம்
எனக்கு நானே செய்த துரோகம்
நான் கொண்டது உயிர்த்தோழன் என்னும் மோகம்
நான் வாழ்ந்த போது அருகில் வந்தாய்
நான் வீழ்ந்த போது அன்பு தந்தாய்
நான் எழுந்த போது தள்ளி சென்றாய்
நான் உயரும் போது வீழ்த்த முயற்சிக்கிறாய்
என்னுள் ஒரு ஐயம்...
உன்னுள் ஒரு ஆசை உண்டோ?
நான் என்றென்றும் தாழ்ந்திருக்க...
என்னை மேலேழுப்புவதாய் நீ ஒரு நாடகமாடியிருக்க?
அல்லது...
உனக்கே உன்னை படிக்கவில்லையோ?
என்னில் உன்னை தேடுகுவையோ?
இனி உன் ஆசை நிறைவேறும்...
நான் இனியும் விழுவேன்...
ஒரு முறை அல்ல பல முறை
நான் இனியும் எழுவேன்...
ஒரு முறை அல்ல பல முறை
அரும்பாக அல்ல ஆலமரமாக.....
இனி இப்படித்தான்...