பார்க்காதே

பார்க்காதே !

வண்ணத்துப் பறவைகள் விளையாடும் பூங்காவில்
எண்ணத்தில் இளையமகன் என்ன செய்திடுவான் ?

வண்ணத்தைப் பார்ப்பான்; வடிவழகைத் தான்பார்ப்பான்;
எண்ணத்தில் அழியாத கோலங்கள் வரைந்திடுவான்.

பார்வையே தீனியெனப் பருவம் வளர்கையிலே
பார்க்காதே எனச்சொன்னால் பாவம் பிறக்காதா ?

அன்புக் கையணைப்பில் அருமை மனைவிவர
இன்பமுடன் கடைத்தெரு எல்லாம் அளக்கின்றான்.

நடமாடும் பாவையர்தம் நளினம் மெருகேறி
இடையசைவில் இனியதொரு நாடகம் நடக்கிறது.

கையணைப்பில் மனைவி; கண்வலையில் கயல்மீன்கள்.
அய்யோ ! பாவமிவன் அகத்திலொரு மீன்குப்பம்.

பார்வையிலே ஏதோ ஏக்கம் தீர்ப்பவனைப்
பார்க்காதே ! எனச்சொன்னால் பாவம் பிறக்காதா?

மிதிலைப் பெருநகர வீதியிலே காளைவர
மெதுவாகச் சானகி மைவிழியாற் பார்க்கின்றாள்;

அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்;
கண்ணிணை ஒன்றையொன்று கவ்விப் பின்னியது.

இலங்கைவீழ்ச்சிக் காவியமே இங்கே வீதியிற்
கலந்த பார்வையில்தான் கருக்கொண்டு மலர்ந்தது.

பார்க்காதே ! என்றந்தப் பார்வையைத் தடுத்திருந்தால்
போர்க்கதையின் போக்கே வேறாகி இருக்காதா ?

வஞ்சத்தைப் பார்க்காதே ! பிறர்வாழப் பொறுக்காத
நெஞ்சத்தைப் பார்க்காதே ! நினைப்பே தவறான
பொல்லாரைப் பார்க்காதே ! பிறர்க்கே உதவுமனம்
இல்லாரைப் பார்க்காதே ! இனிய வார்த்தைகள்

சொல்லாரைப் பார்க்காதே ! நன்மை தரும்நூல்கள்
கல்லாரைப் பார்க்காதே ! கயமை செய்துலகில்

வாழ்வாரைப் பார்க்காதே ! வாழ முயலாமல்
தாழ்வாரைப் பார்க்காதே ! தருக்கரைப் பார்க்காதே !

கூனியைப் பார்க்காதே ! கோசலையைப் பார்த்துக்கொள் !
நானிலத்தில் கூனிகள் நடமிடாது பார்த்துக்கொள் !

என்னைப் பார்க்காதே ! என்கவிதை பார்த்துக்கொள் !
விண்ணைப் பார்த்துமன விரிவை ஆக்கிக்கொள் !

எழுதியவர் : பொற்கிழிக் கவிஞர் சவகர்ல (30-Nov-15, 5:58 am)
பார்வை : 76

மேலே