அப்பாவின் வாக்குமூலம்
புன்னகை தவழ்ந்து
பதுமையாய் என் மகள்!
விரல் நுனிப்பிடித்து நடக்கையில்,
வழி முடிந்து விட்டதே அதற்குள்...
ஏக்கமாய் மனம் ஏங்கும்!
இன்னும் சிறு தொலைவிற்கு
பிஞ்சு விரல்கள் என் கையைப் பற்றாதோ?
புன்னகைத் தவழ செல்கிறாள்!
நான் பணிக்குச் செல்கையில்
நல்லன்போடு அப்பா என்பாள்!
குட்டித் தேவதையை
தோளுயரத் தூக்கிக் கொஞ்சுவேன்!
கன்னம் சிவக்கும்படி முத்தமிட்டு
கனியமுதாய் சிரிப்பாள்!
'இதான் உங்க ஊர்ல முத்தமா'
பொய்க்கோபம் காட்டவே,
அழுத்தமாய் இதழ்ப் பதித்து
எச்சிலாக்குவாள் என் கண்ணத்தில்!
செல்ல மகள் சிரிப்பைப் பார்க்க
சீக்கிரமாய் வீடு திரும்புவது வழக்கமாச்சு...
வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது!
ரசிக்கத் தொடங்கினேன்-நாளும்
அன்பு மகளின் புன்னகையைத்
தவறவிடக்கூடாது என்பதற்காக...