எரிதலின் மிச்சம்
உங்களுக்கு பிடிச்ச ஒருத்தர பிரிஞ்சிருக்கீங்களா.... அதும்.. 15 வருசமா அவுங்க எங்க இருக்காங்க.. என்ன பண்றாங்கன்னு தெரியாம தவிச்சிருக்கீங்களா....?
இன்றும் கண் முன்னால் நிற்கிறது அந்தக் கோரக் காட்சி... மனிதர்கள் செத்து செத்து விழுந்த... பூமியெங்கும் ரத்த மழையும், குண்டு மழையும் பொழிந்த
மணித் துளிகளில்.. மரணத்தின் கைகளில் விளையாடிக் கொண்டிருந்த மிதுனனும் நியந்தாவும்... ஆளுக்கொரு திசையில் பிரிந்து கிடந்த இடைவெளியை மழை கொஞ்சம்... அழுகை கொஞ்சம்.... துப்பாக்கிக் கொஞ்சம்.. மனித சடலங்கள் கொஞ்சம் என பிரித்தே போட்டது... பிரிவுகளின் கரம்... வெகு நீளமானது... அத்தனை பச்சை ரத்த வாசம் கொண்டவை... அதன் நகங்களின் கோரத்தில் அழுக்கடைந்து நிற்கும் இடைவெளியை எடுக்க எடுக்க தூர் கொண்டு நிரம்பும் ஆதி ரகசியமாய் பிரிவு மிகப் பெரிய நரகத்தை பதிந்தது....
கடந்தன 15 வருடங்கள்... எத்தனை அகதி முகாம்களைக் கடந்த பின்னும் அவளைக் காண முடியவில்லை... அவனிடம் இருப்பதெல்லாம் அவளுடைய
6 வயது அன்றைய புகைப்படம் மட்டுமே.. எங்கெங்கு தேடிய பின்னும் ரத்த சுவடுகளில் காய்ந்து ஒழுகிய நடுக்கம் மட்டுமே தோட்டாக்களை பிரசவித்துக் கொண்டிருப்பதாக நினைவுச் சுருள் ரத்தம் சொட்டிக் கொண்டே இருந்தன......இதோ, "இன்று கதவைத் தட்டிக் கொண்டு வீட்டுக்குள் வந்து விட மாட்டாளா..." என்று ஏங்கும் தருணமெல்லாம்... குருதி சொட்டும் கழுகின் வட்டங்களை பிணங்களின் பெரு மூச்சென அவனின் அறையெங்கும் அனல் ததும்பி தலை கீழாய் தூக்கிட்டுக் கொண்டே இருக்கும்.. கண்கள் மூடி நடுங்குவான்...நடுங்குதலின் நேரங்களில்... ஒடுங்குதலின் மூலையென மூளையெங்கும்...விரவி பரவிக் கொண்டே இருக்கும் நியந்தாவின் நினைவில்... ஓங்கி அழும் திறன் கூட மிரட்டும்....
நியந்தா......
ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் அல்லது அதிக பட்சம் அவன் வாயில் விழுந்து எழுந்து வெற்றிடக் கவிதையாக வளைந்து நெளிந்து கரைந்து கொண்டே இருக்கும் அல்லது பூத்துக் கொண்டே இருக்கும்... பொருளென அன்றைய மிதுனன் நியந்தாவைக் கொண்டாடிக் கொண்டே இருந்தான்.. இருவரும் சம வயதுக்காரார்கள்தான்.. நியந்தா மூன்று நான்கு மாதங்கள் மூத்தவளாக இருப்பாள்... தன்னை அக்கா என்று கூப்பிட சொல்லி சண்டை எல்லாம் போட்டு இருக்கிறாள்... பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள்.. இருவரின் அம்மாக்களும் சமபாதியாக எல்லா பொருத்தங்களும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்
தான்... இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் மிதுனனும் நியந்தாவும்... கல்யாணம் செய்து கொண்டு இதே வீட்டினில் அவர்களைப் போலவே இரு குழந்தைகளைப் பெற்று போட்டு நாம் அதுங்களை கொஞ்சி மகிழ வேண்டும் என்பது அவர்களின் தீரா பகலின் பேச்சுக்களின் நீளம்...
ஓயாத சண்டை.... ஓய்ந்த போது யாருமே இல்லாமல், தான் மட்டும் தமிழகம் வந்து சேர்ந்திருந்தான் மிதுனன்... அழுதான்... அரட்டினான்... எல்லா
முகங்களும் அந்நியப்பட்டே இருக்க, அம்மா... அப்பா... அக்கா.. எல்லாரும் செத்துக் கிடந்ததைக் கண்டு உறைந்து நின்ற நினைவினில் நியந்தாவின் பிணம் கூட கிடைக்கவில்லையே...என்று அழுகை அடக்கி தேடத் துவங்கினான்... இதோ 15 வருடங்கள் ஓடி விட்டன.. இன்றும் தேடுகிறான்.. நேற்று நண்பன் ஒருவனிடம் பேசும் போதுதான் "முகப் புத்தகத்தில் தேடிப் பார்த்தால் என்ன?"- என்று ஒரு யோசனை கிடைத்தது.. அதன் தொடர்ச்சியாக நேற்று
இரவு முகப் புத்தகத்தில்...கையில் இருக்கும் நியந்தாவின் ஆறு வயது புகைப்படத்தை...பதிந்து விட்டு....
"இந்தப் பெண்ணை யாராவது எங்கேனும் பார்த்திருந்தால் அல்லது நட்பு கொண்டிருந்தால்.... தகவல் அனுப்புங்கள்...15 வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படம் இது...இதைத் தவிர வேறு ஒன்று என்னிடம் இல்லை... ஒருவேளை நியந்தாவே இதைப் பார்க்க நேரிட்டாலும் கடவுளைக் கொண்டாடும் தருணமாக அது இருக்கும்... இன்னும் எத்தனை வருடங்கள் பிரிந்து கிடப்பது என்று தெரியவில்லை...மலை உச்சிகளும்... ஆற்று படுகைகளும்.. எங்கள் உலகமாகிக் கிடந்தது ஒரு காலம்.... என்ன உண்டாலும் பாதி பாதி பகிர்ந்து கொண்ட காலம் ஒன்று இருந்தது... அவள் ஆடை நான் அணிந்து கொண்டு அவள் போல நடந்து காட்டிய நாட்களில் வெட்கம் தாளாமல் குசினிக்குள் ஒளிந்து நின்று அவள் பார்த்த காலம் மீண்டும் வேண்டும்...
கை கோர்த்தபடியே தூங்கிப் போன இரவுகளில் பிரிவுக்கு இருந்த கதவை மூடாமலே எங்கள் வீடு இணைந்திருந்த காலம் தேடிக் கதறுகிறேன்.....
எல்லாம் போன பின்னும் எல்லாமாக இவள் இருந்தால் போதும்.. இன்னும் கொஞ்ச நாள் இருந்திடலாம் என்றே 15 வருடங்கள் கடந்து விட்டேன்... காணும் விழியெங்கும் காட்சிகளாய் விரியும் காற்றின் நிறங்களில் விண்மீன் சிதறலென மிதந்து கொண்டே இருக்கும் மனதுக்குள் மெய்ம் மறக்க
இவள் வேண்டும்.......அழுதழுதே அடங்கி விடவா நான்... இல்லை,.. அள்ளி அணைத்திடவே நியந்தாவின் இருப்பு வேண்டும்.... இருத்தல் வேண்டும்...கை போன கால் போன உயிர் போன பிணங்களில் ஊடாக ரத்த சகதியில் புரண்டு வெளிறிபோன உடலோடு நானும் நியந்தாவும்... பதுங்கி கிடந்த பதுங்கு குழியின் பெருமூச்சு சுவாசம் இன்றும் ஆழ்மனதில் நினைவிழந்து மூச்சடைக்க வைக்கின்றன... கொத்து கொத்தாய் வீழ்ந்த மனிதர்களிடம் எழும்ப சொல்லி அலறும் 6 வயது தானே அவளுக்கும்.... அதிகாலை ஏது... அந்தி மாலை ஏது... அத்தனையும் அணைத்தபடி கிடந்த நடுக்கம்தானே....சரி எப்படியும் இந்த இரவாவது மிஞ்சிக் கடந்து விடுவோம் என்ற போது தான்... பிரித்து இழுத்துப் போன மிலிட்டரிக்காரன் ஒருவன், முகத்தில் வழிந்த மனித சதைகளை துடைத்தெரிந்தபடியே வெறித்துப் பார்த்துப் போனான்.. வீரிட்டு அழுத என் சத்தம் யார் காதிலும்
விழவில்லை.. விழுந்ததெல்லாம் குண்டுகளின் கன மழை......
எத்தனையோ அதியங்கள் நடக்கும் இந்த உலகில் அவளும் கிடைத்து விடுவாள் என்றே நம்புகிறேன்.. தோழர்களே.... உதவுங்கள்... உங்கள் நண்பர்,
அவர்களின் நண்பர் என்று இந்த செய்தி பரவட்டும்.. நியந்தாவின் குரல் கூட இதோ இப்போது கூட எனை அழைக்கலாம்.... காத்திருக்கிறேன்..... மிதுனன்...."- என்று முடித்து செய்தியை பரப்பி.. இதோ இரவும் தீர்ந்தது.....
விடியலில் அவசரமாக கணினியைத் திறந்தான்.....
அனுதாபங்கள்.. சோக பகிர்வுகள்.. நம்பிக்கை வாழ்த்துக்கள், மற்றும் லைக்ஸ்கள் குவிந்து விரவிக் கிடந்த முகப் புத்தகத்தில்.... "நான் பாத்திருக்கேன் மிதுனன்...." என்று ஒரு செய்தி இருந்தது......உலகம் சற்று நின்று அட நின்றே விட்டது.. என்று கண்கள் திறந்து கத்தினான்... கடவுளுக்கு நன்றி
கூறினான்... அழுகையும் சிரிப்பும் மாறி மாறி வந்தன.. வந்த அழுகையெல்லாம் சிரிப்பாக மாற,, மாறிய சிரிப்பெல்லாம் மீண்டும் அழுகையாக மாறியது... கணினியை அணைத்துக் கொண்டான்.... செய்தியை மீண்டும் நன்றாக படித்தான்......
"நண்பரே வணக்கம்... நான் இந்த புகைப்படத்தை, மட்டும் பார்த்திருக்கிறேன்...... நன்றாக மனதில் இருக்கிறது.. ஆனால் எங்கு பார்த்தேன்.. எப்போது பார்த்தேன் என்று மட்டும் நினைவில் இல்லை... கொஞ்சம் டைம் கொடுங்கள்... எப்படியும் ஞாபகப் படுத்தி சொல்கிறேன்....... நன்றி...."
-நிவ்யா-
மனதுக்குள் அதிர்வலைகள் அங்கும் இங்கும் அலைந்து... மறுபடியும் நிவ்யாவுக்கு ஒரு செய்தி அனுப்பினான்....
"நிவ்யா... கொஞ்சம் யோசியுங்கள்.. தயவு செய்து எப்படியாவது... கண்டு பிடித்து விடுங்கள்... யாருக்குமே தெரியாத இடத்தில அவள் இருக்கிறாள் என்ற
போது இதோ நீங்கள் தெரியும் என்கிறீர்கள்.. அப்படி என்றால் கண்டிப்பாக அவளை நான் நெருங்கி விட்டேன் என்றே நம்புகிறேன்.... உதவுங்கள் நிவ்யா.. கொஞ்சம் யோசியுங்கள்.."
-மிதுனன் -
பதில்கள் தொடர... நிவ்யாவும்... மிதுணனும் நெருங்கிய நண்பர்களாகிப் போனார்கள்...மிதுனன் கிளம்பி நிவ்யாவின் ஊருக்கே சென்று விட்டான்.... இருவரும் சேர்ந்தே தேடத் துவங்கினார்கள்.... நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், உறவுகள், அவர்களின் உறவுகள்.... என்று இவர்களின் தேடல் நீண்டு கொண்டே இருந்தன.... நிறைய பேசிக் கொண்டார்கள்.... நிவ்யாவின் ஆறுதல் அவனுக்கு தேவையுமாக இருந்தது...
அந்தி மாலைப் பொழுதில் வீதிகளில் வெறிச்சோடிய இரவு சாயல்களை நழுவ விட்டுக் கொண்டே இருவரும் நடந்தார்கள்....
"என்னால் இதுக்கு மேல யோசிக்க முடியல மிது..... என்ன பண்றது"- என்று அழுகவே தொடங்கி விட்டாள் நிவ்யா....
"இல்ல நிவ்யா..... நல்லா பாரு.. இந்த போட்டோவைத்தான நீ பார்த்தா...?"-என்றான் மிதுனன்... ஒரு குற்றவாளியின் படபடப்போடு....
"கண்டிப்பா தெரியும் மிது.. இந்த போடோவைத்தான்.. ஒரு மூணு வருசத்துக்கு முன்னால ஏதோ ஒரு வீட்ல பார்த்தேன்.. இங்கதான் எங்கையோ... இதே ஊர்ல... ஆனா... எந்த இடம்னு தெரியல..... சுத்தமா ஞாபகத்து வர மாட்டேங்குது...."-அவள் இயலாமையின் கைகளுக்குள் அகப் பட்டுக் கொண்ட கைப் பிசைதலாய் தடுமாறினாள்....
"உங்க சொந்தகாரங்க வீடு ஏதாவதா... இல்ல உன் நெருங்கிய தோழிங்க வீடா.... இல்ல ஏதாவது முகாமா... ஏதாவது பள்ளிக் கூடமா... யோசி நிவ்யா..
எனக்கு கிடைச்ச கடைசி ஆயுதம் நீ.. நீயும் உதவலனா இனி அவள நான் பாக்கவே முடியாது....."-என்று படபடப்போடு கூறி கண்களில் நீர் வழிய காற்றில் வெற்றிடம் நிறைத்தபடியே ...வீதியில் போகும் பெண்களில்... கோவிலுக்கு போகும் பெண்களில்... யாராவது தன் நியந்தாவாக இருக்க மாட்டாளா என்று
உற்று உற்று கவனித்த மிதுனனின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள் நிவ்யா...
யாருமே அவள் சாயலில் இல்லை....
இருவரும் சோர்ந்து பழுப்பேறிய இரவு வீதிகளில் ஒரு காற்றைப் போல நடந்தார்கள்... நாய்களின் கவனம் அவர்களை கலைக்கவே இல்லை.. சில
காவலர்கள் விசாரிக்கவும் செய்தார்கள்... தலைக்குள் சுழலும்... வெளிகளின் ரீங்காரத்தை இருவருமே உணர்ந்தார்கள்.. மிதுனன் கண்ணீர் சிந்தி குலுங்கவும் தொடங்கினான்.. அணைத்துக் கொண்ட நிவ்யா....சற்று யோசித்தாள்..... நடந்தபடியே இருந்த மௌனத்தைக் கலைத்தவள், தயங்கியபடியே பேசத் தொடங்கினாள் .......
"மிது... ஒரு வேளை நான் இந்த போட்டோவ பார்த்து தப்பா முடிவு பண்ணி உங்கிட்ட சொல்லி இருக்கலாம்..... எனக்கென்னமோ நியந்தா வருவான்னு
நம்பிக்கை இல்ல...அவ எங்க இருக்கா, என்ன பண்றா எதுமே தெரியல...6 வயது போட்டோவ வெச்சுகிட்டு எப்டி கண்டு பிடிக்கறது மிது... என்னமோ தப்பா இருக்கு....எங்கையோ குழப்பமா இருக்கு....."-அவள் பேசிக் கொண்டே நடந்தாள் ... அவன் பார்த்துக் கொண்டே நடந்தான்..
நள்ளிரவு பனிகளின் பரவல் இருவரையும் மறைத்து இசைந்து கொண்டே போவதை இருவருமே கவனித்தார்கள்.. சாலையோர திண்டுகளில் எத்தனை உயிர் உடல் போர்த்திக் கொண்டு தூங்குகிறது.... சாலைவாசிகளின் வாழ்க்கை கண் முன்னே வந்து போனது... கவனம் மாறி கண்கள் துடைத்துக் கொண்டான் மிது... மெல்ல மெல்ல நிவ்யா அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்...
"இந்த உயிரும் உடலும் விசித்திரம் நிறைந்தவை இல்லையா மிது...!" என்றாள் நிவ்யா....
தோளில் சாய்ந்திருந்த முகத்தை சற்று நின்று திரும்பிப் பார்த்த மிதுனன்... மெல்ல புன்னகைத்தான்.....
"நினைப்பது அல்ல வாழ்க்கை.. வாழ்வதுதான் நினைப்பு... என்றான் பதிலுக்கு....
'எத்தனை உறவுகளோடு வருகிறோம்... போகும் போது ஒன்றுமேயில்லாமல் போய்விடுவதில்தான்..மொத்த சூன்யமும் மறைந்து நிற்கிறது ....."
"சலனங்கள் அற்ற உறவுகளில் ஓர் உயிர் இன்னோர் உயிரைத் தேடியே சார்ந்திருக்கிறது... அதற்கு பயம்.. இந்த வாழ்க்கையின் மீது பயம்...ஏதோ ஒரு பற்றுதல் தேவைப் படுகிறது.. அது கடவுளாக இருக்கலாம்.. புத்தகமாக இருக்கலாம்.. சாத்தானாக இருக்கலாம்.. ஒரு மனைவியாக இருக்கலாம்.. ஒரு
தோழனாக இருக்கலாம்.. ஒரு காதலியாக இருக்கலாம்... ஏதோ ஒன்றாக இருக்கலாம்.. முடிச்சு தேவைப் பட்டுக் கொண்ட உயிர்தான் நிம்மதியாக
வாழ்ந்து நிம்மதியே இல்லாமால் சாகிறது...."
"இங்க மரணத்துக்கு மட்டும்தான் மனிதன் பயப்படுகிறான்..அதுவும் தனியாக சாவதை ஒருவரும் விரும்புவதில்லை....அதற்குதான் போர் கொண்டு மொத்தமாக செத்துப் போகிறான்.... மரணம் அவனை மரணித்த பின்னும் விரட்டுகிறது..."
"சக உயிர்கள் மேல் கொண்ட அன்புதான் அவனை வாழ்ந்து கிடக்க சொல்கிறது... நன்றாக பார்..தற்கொலை செய்து கொள்பவர்களில் பலர் அன்புக்கு ஏங்கியவர்கள்தான்..... தன்னை யாருமே கண்டு கொள்ளாத ஒரு நிலையில்தான் ஒரு வகை வெறுப்பு வருகிறது.... வந்த வெறுப்பு மரணத்தையும் சேர்த்துக் கொண்டு வருகிறது... இது சூன்யக்காடு.. வழிகளற்ற வழிகள் நிறைந்து கிடக்கும், கோடுகளால் வரையப்படாமலே முடிந்து போகின்றன கோட்டோவியங்கள்..."
அவர்கள் பேசிக் கொண்டே நடந்தார்கள்...நடந்து கொண்டே பேசினார்கள்.. இரவைக் கொண்டாடும் அவர்களின் கண்கள் சூரியனின் உருகுதலைக் கொண்டே வியர்த்தும் கொட்டியது.....
"என்னால உனக்கு ரெம்ப கஷ்டம்..... .. இல்லையா...நிவ்யா!..... நான் நாளைக்கு ஊருக்கு போய்டறேன்.. நியந்தா வரும் போது வரட்டும்...நாமளும் எத்தன இடத்திலதான் தேடறது... கிடைக்கனும்னு இருந்தா கிடைச்சிருப்பா.... கிடைப்பா... விடு...." என்று அவன் சொல்ல சொல்ல.. நிவ்யாவின் கண்களில்
பெரும் சுழற்சி.... பெர்முடா முக்கோணத்தில் காணாமல் போனவளின் மனது போல ஒரு இல்லாமைக்குள் நின்றபடியே மாயங்களின் முடிச்சை அவிழ்ப்பவளாக மெல்ல சிரித்தாள்... நெருங்கி வந்து இறுக அவனை அணைத்துக் கொண்ட நிவ்யா.... ஆழ்ந்த மனக் கண்கள் சுழற்சியில் மேல் எழுந்து விட்ட தவிப்பில்..."மிது....... நான் கண்டு பிடிச்சிட்டேன்...கண்டு பிடிச்சிட்டேன்"- என்று கத்த.......சற்று அவளை உற்று நோக்கி நிஜத்தை உள் வாங்கிய மிதுனனும் ஆர்வ மிகுதியில் அவளை தூக்கிக் கொண்டு சுற்றினான்.....
சுற்றுவது பூமி எனப் படுவது இப்போதுதான் என்பதாக ஒரு வலை அவர்களை பின்னிக் கொண்டே சிரித்தது...
"என்ன சொல்ற நிவ்யா....?" அவன் கேட்க கேட்கவே....... "வா....... வா........ "என்று அவனை இழுத்துக் கொண்டு அடுத்த வீதியில் ஓடினாள் நிவ்யா..
வீதியின் முகப்பில் நின்று பார்த்தவர்களுக்கு வீதி முழுக்க இடது புறமும் வலது புறமும்.. அடுக்கி வைத்தார் போல கட்டட வாழ்விடங்கள் நிறைந்து நின்றன...
அவளின் கண்கள் இரு பக்கமும் சுழன்றன..
நிறைந்து நின்ற வீடுகளில் நின்ற மிதுவின் கண்கள் ஆச்சரியத்தில் உறைந்து, எப்படி இத்தனை வீடுகளில் கண்டு பிடிப்பது என்பது போல பார்த்தன...... அவள் கண்கள் மூடிக் கொண்டே நகர்ந்தாள்... "இதுவா....? அதுவா...! அதுவா....! இதுவா....? இல்லை இந்த வீடு..... இல்லை அந்த வீடு......" நினைவுக்
குழிக்குள் புதையுண்ட அந்த வீட்டுக் காட்சியை நினைவுக்குள் மேல் எழுப்ப முயன்று கொண்டே நடந்தாள்... குழிக்குள் விழுந்த விட்ட ஒரு ரூபாய் நாணயத்தை மேலே நின்றபடியே இரண்டு குச்சி கொண்டு இரண்டையும் ஒரு சேர அழுத்தி இணைத்து இரு குச்சியின் பிடியில் நாணயத்தை சிக்க வைத்து இரண்டு கைகளின் சமரச அழுத்தலில் மேல் கொண்டு வருவது போல.. மனதுக்குள் ஆழ்ந்து காணாமலே போன காட்சியை மேலே கொண்டு வந்து கொண்டிருந்தாள்... அதே சமயம்... அவன் வேறோர் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்....
கண நேர தடுமாற்றத்தில் கிடைத்து விட்ட வழி போல அவள் கண்டே பிடித்து விட்டாள்...இதோ இந்த வீடு தான்.... அந்தக் காட்சி..... நியந்தாவின் புகைப்
படத்தை கண்ட அந்த ஓர் நாள், ஒரு கணம்.... அந்த வீட்டு ஜன்னல் அருகே நின்ற போது பிடிபட்டு விட்டது.. மீண்டும் ஒரு முறை மனதுக்குள்
காட்சியை நன்றாக ஓட்டிப் பார்த்த நிவ்யா..... "அயோ.....கடவுளே....." என்று உணர்வுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல.. சில்லிட்டு நடுங்கி கண்களில் திரண்டு விழும் கண்ணீரை துடைக்காமலே சட்டென அந்த இடத்தைக் கடந்து மிதுனனிடம் ஓடி வந்தாள்......
அவளின் சோர்வை, தடுமாற்றத்தைக் கண்ட மிதுனன், "என்னாச்சு நிவ்யா.... இன்னும் கொஞ்சம் தேடினா கண்டிப்பா கிடைப்பான்னு நம்பறேன்...ப்ளீஸ்...... இன்னைக்கு மட்டும் தேடலாம்......வா...நிவ்யா....."- என்று கெஞ்ச கெஞ்ச அவனை இறுகக் கட்டிக் கொண்டாள் நிவ்யா....
என்ன நடக்கிறது என்று யோசித்து அவளை பார்க்க, "என் பேச்சை கேப்பியா மாட்டியா" என்று கண்கள் கலங்க... கெஞ்சுவது போல பேசினாள் நிவ்யா..... சுற்றும் அமைதியால் நிரம்பிக் கிடந்த வெளியில் பழுப்பு நிறம் இன்னும் கொஞ்சம் அதிகமாகிக் கிடந்தது.......
என்னாச்சு என்பது போல பார்த்த அவனிடம்.... "இங்க இல்ல மிது... நான் தப்பு தப்பா யோசிக்கறேன்.. எனக்கு இன்னும் சரியா தெரியல.. இப்போ நான்
தூங்கனும்... ப்ளீஸ்....... வா........... போலாம்"- என்றபடியே நிவ்யா முன்னோக்கி வேகமாக நடக்க அவள் பின்னால் ஒன்றும் புரியாமல் செயலிழந்து யோசித்துக் கொண்டே நடந்தான் மிது....
"என்ன நாய் இப்பிடி குலைக்குது" என்றபடியே யாரோ திறந்த வீட்டில் வந்த வெளிச்சத்தில் இருவரும் புகையாகி மறைந்து கொண்டிருந்தார்கள்...
சற்று முன் அந்த ஜன்னலில் தெரிந்த காட்சிக்குள் வரிசையாக மாட்டப் பட்டிருந்த புகைப்படங்களில் நியந்தாவின் புகைப் படத்துக்கு மட்டும் மாலை போடாமல் வைத்திருந்தார்கள்.... இந்த காட்சியைத்தான் என்றோ ஒரு நாள் நிவ்யா பார்த்திருக்கிறாள்.... அதைத்தான் மறந்து விட்டு பல கட்ட மனத் தேடல் முயற்சிக்குப் பின் இன்றும் பார்த்திருக்கிறாள்..... இப்போதுதான் நிஜம் புரிந்திருக்கிறது........
ஆம்....நியந்தா இன்னும் சாகவில்லை.....நியந்தா இன்னும் சாகவேயில்லை....
சாகாதவளை செத்தவர்கள் உலகத்தில் தேடிக் கொண்டிருக்கும் மிதுவையும் தன்னையையும் நினைத்து ஒரு வகை சுய பச்சாதாபத்தில் அழுகை
பொத்துக் கொண்டு வரவே "அவள் இங்கு இல்லை" என்று சமாளித்துக் கொண்டு வேக வேகமாய் அந்த இடத்தை விட்டு நடந்து கொண்டிருக்கிறாள்.....மிதுவையும் அழைத்துக் கொண்டு...எக்காரணம் கொண்டு அவனுக்கு தெரியக் கூடாது என்பதாலும்...
அந்த அதி காலை நேரத்திலும்...உயிருள்ளவர்களின் உலகத்தில்... ஜன்னலை கொஞ்சமாக திறந்து வைத்துக் கொண்டு மிதுனனின் 6 வயது புகைப்படத்தை முகப் புத்தகத்தில் பதிந்து கொண்டு தேடிக் கொண்டிருந்தாள் 21 வயது நியந்தா....
கவிஜி