வயலோர கவிதை

இயற்கை இழையோடும்
எங்கள் பயிர் வரப்பில்
காண்பவை எல்லாமே கவிதை…!
செயற்கை நுழைந்தாடும்
கிராமிய உயிர் பரப்பில்
நிறைபவை எல்லாமே கவிதை…!
அதிகாலைப் பனித்துளியில்
பயிர்ச்செழுமை கவிதை…
அவை நாணி நிற்கும் கோலங்களின்
மெளனங்களும் கவிதை…!
அந்த நாணத்தை தழுவிச்செல்லும்
இளங்காற்றின் இனிமை கவிதை…
இந்த இனிமையிலே கூவுகின்ற
புளியமர குயிலோசையும் கவிதை...!
மெல்லிசையாய் சலசலக்கும்
வாய்க்கால் நீர் கவிதை…
அது வயல் நிறைந்து தென்றலிலே
ஆடிடும் நீரலையும் கவிதை…!
வாய்க்கால் மடையை திறந்திடும்
மண்வெட்டி ஓசை கவிதை…
அந்த ஓசை மறையுமுன்னே
வரும் மண்வாசம் கவிதை…!
செழித்து நிற்கும் பயிர்களிலே
படிந்திருக்கும் பசுமை கவிதை...
அதில் இயற்கை படைத்திருக்கும்
இனியதொரு வாசமும் கவிதை...!
பயிர்வாச ஈர்ப்பினிலே சொக்கி நிற்கும்
தும்பியின் மயக்கம் கவிதை...
அந்த மயக்கத்தில் வந்துகூடும்
பெண் தும்பியின் கூடலும் கவிதை...!
வயல்மேல் பறந்தபடி கவரிவீசும்
பட்டாம்பூச்சிகளின் சிறகசைவு கவிதை...
அவை தைரியமாய் இறங்கி வந்து
உழவன் என்தோளமர்ந்து பேசுவதும் கவிதை...!
வானூர்தி வரிசையென பாய்ந்திறங்கும்
கொக்குகளின் அணிவகுப்பு கவிதை...
வந்திறங்கி நெடுமூக்கில் வயலாடும்
அவற்றின் கழுத்தசைவுகளும் கவிதை...!
சேற்று வயல்மறைந்து பாடுகின்ற
தவளைகள் ஓசை கவிதை...
அதைப் பாடுவது யாரெனக் கொத்தி
ஆராயும் நாரைகளின் தேடல் கவிதை...!
இத்தனை வயல்சுகங்களையும்
சொற்களில் வடித்தெழுதுவதும் கவிதை
அதை ரசித்திட இயற்கை தந்த
பசும்பார்வைப் பரிசுகளும் கவிதை...!