மழையே நின்றுவிடு

மழையே உன்னை வணங்குகிறேன்
மன்றாடி உன்னிடம் வேண்டுகிறேன்
என்னஉன் மனநிலை எண்ணுகிறேன்
உன்நிலைக் கண்டின்று வருந்துகிறேன்

கோடையில் வாடிய காலங்களில்
கனிவுடன் கைகூப்பி வேண்டிநின்றோம்
காய்ந்தே காத்திடும் கதிரொளிபோல்
கட்டுக்குள் மழைதர கரம்குவித்தோம்

இரவினில் நிலவின் குளிர்போன்று
இன்பமழை பெற உனைப்பணிந்தோம்
வாய்கொண்டு பாடிடும் குயிலிசைபோல்
வெப்பமும் தணிந்திட மழைகேட்டோம்

தாயுன்னை நம்பிய சேய்நாங்கள்
தவித்திடும் நிலையினைத் தரவேண்டாம்
எங்களைத் துன்பம் செய்வதிலே
என்னதான் உனக்குக் கிடைத்துவிடும்

மழைநீர் உயிர்நீர் என்பதையே
மாற்றிட நீயும் துணிந்துவிட்டாய்
வாட்டியே வதைத்திடும் வல்லமையை
வெள்ளத்தை தந்தே காட்டிவிட்டாய்

இத்தனை கோபம் மக்கள்மேல்
இருப்பதை நீயின்று காட்டிவிட்டாய்
சிறுசிறு துளியாய் பெய்தேநீ
பெருவெள்ளம் கொடுத்து பழிதீர்த்தாய்

மாணவர் கற்றிடும் பள்ளிகளை
மூடவைத்து அதில் சுகம்கண்டாய்
மக்களை இப்படி வாட்டிவதைத்திட
எத்தனைகாலம் கனவு கண்டாய்?

மழைஎன்றால் மக்கள் அனைவருமே
மனதால் வெறுத்திடும் நிலைதந்தாய்
பூமித்தாயை முழுவதும் மறைத்து
பொல்லாத பெயரும் ஏன்கொண்டாய்?

வறண்டுக்கிடந்த ஏரிகள் குளங்களில்
வாழ்ந்திட வீடுகள் கட்டிவைத்தோம்
அத்தனை இடங்களும் உன்சொந்தமென்று
அனைவரும் நன்றாய் உணர்ந்துகொண்டாம்

தங்கத்தமிழர்கள் வாழ்ந்திடும் நாட்டில்
தாயேஉன் சினம் நீக்கிவிடு
தவித்திடும் எமக்கு மன்னிப்புதந்து
தணிந்தே மழையை நிறுத்திவிடு.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (2-Dec-15, 7:55 pm)
பார்வை : 84

மேலே