சமத்துவம்
 
            	    
                சமத்துவம்...!!
வங்கிக் கணக்குகளின் 
இருப்புத் தொகையினைக் கூறியும் 
வைத்திருக்கும் ஏ டி எம் கார்டுகளின் 
பெருமையையும் பேசி இறுமாந்திருந்த 
பெரியவனின் ஆணவத்தை 
அழித்து விட்டிருந்தது 
வீட்டினில் புகுந்த வெள்ளம்...!!
"டேய்.. அவா வீட்டுக்கெல்லாம் போனா 
தூத்தம் கூட குடிக்காம திரும்பனும் 
என்ன புரிஞ்சின்டியா" 
அன்று ஆச்சாரம் பார்த்த அம்மா
தவிப்புடன் கேட்கிறாள் 
"துளியூண்டு தூத்தமாவது 
கெடைக்குமான்னு 
அந்த பாஷா கிட்ட கொஞ்சம் கேளேன்
நாக்கு வறண்டு போறதுடா .."
அம்மாவின் ஆச்சாரத்தை 
துவம்சம் செய்திருந்தது 
வீட்டை விட்டு விரட்டிய வெள்ளம்..!!
ஏசி அறையில்தான் உறங்குவேன் 
ஏசி காரில்தான் பயணிப்பேன் 
சொகுசாய் வாழ்ந்து களித்தவன்
தங்குவதற்காக 
ஒதுக்கப்பட்ட அந்த பள்ளியில் 
ஒடுங்கிக் கொள்ள 
எங்காவது ஒரு மூலையாவது 
கிடைக்காதா என்று 
இடம் தேடிகொண்டிருந்தான்
இளைய மகன்..!!
செல்லமான பிள்ளையின் 
சொகுசான நினைவுகளையெல்லாம் 
சூரையாடிவீட்டிருந்தது 
எதிர்பாராமல் வந்த வெள்ளம்..!!..
உயிர்போனால் மட்டும் 
சமமென்றில்லை
ஒன்றுமில்லாமல் போனாலும் 
அனைவரும் சமம்தான் 
சமத்துவத்தை நிலை நாட்டியிருக்கிறது 
சென்னையை சிறைபிடித்த 
வரலாறு காணாத மழை..!!
	    
                
