மழை நீர்
வெக்கையிலே வெட்கங்கெட்டு
ஓடி ஒளிந்த மழை
வஞ்சம் தீர்ப்பதுபோல்
வெள்ளமாய் வந்து மக்களை
அஞ்சி ஓட வைத்ததோ!
மனிதனுக்கு அடக்கத்தைக்
கற்று தந்த இயற்கை
தண்ணீரை மட்டும் பேயாட்டம்
ஆட வைத்து வேடிக்கை பார்த்தது
என்ன நியாயம்?
வாழும் உயிர்களெல்லாம்
நீரை பருகி உயிர் வாழ
நீரோ பண்டமாற்று செய்வதுபோல்
மண்ணின் உயிர்களை எடுப்பது
ஆணவமா?அகங்காரமா?
நீரை அணைகட்டி தடுத்து
சிறை வைத்ததால்
பழிக்கு பழியென மக்களை
வீட்டிலேயே அடைத்து வைத்து
மகிழ்ச்சி கொள்கிறதோ!
வெள்ளமென வெகுண்டெழுந்து
அடங்க மறுத்த மழை நீரை
தடுத்து நிறுத்த
கழிவு நீரும் காறி உமிழ்ந்து
இழிவு படுத்தியதோ!
பேயாட்டம் ஆடி
பெருக்கெடுத்த மழை நீர்
ஏழைக் குடிசைகளைக் களவாடி
நட்டநடு வீதியிலே மக்களை
நடைபிணமாய் ஆக்கியதோ!
வந்த சுவடு தெரியாமல்
தொட்டு போகும் தென்றல் போல
மழையே வந்து போகக் கூடாதோ!
மக்கள் வாழ்வை முடக்காமல்
காத்தருள வேண்டாமோ?
மழையே உன்னையும் சேர்த்து
சுமக்கும் இந்த பூமியின்
வளத்தை அழிப்பது பாவமல்லவா?
மண் அன்னை மன்னிப்பாளோ உன்னை
நானறியேன்!