தவறியவர்கள் -கார்த்திகா
வல்லமை நிறைந்த
பொன் மாலைப் பொழுதுகளில்
கண்ணகிகள் கீரை
பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
பள்ளி விட்டு வந்த சிறார்களின்
வயிற்றுக்கு சிறிது ஈந்துவிட்டு
பொதியோடு தள்ளி விடுகின்றனர்
மீண்டும் ஓர் மனனம் செய்தலுக்கு..
கண்களை நெடுந்தொடர்களிலும்
செவிகளை புரளிக்கும் ஒப்புவித்து
முகம் கலையாத ஒப்பனையில்
போர்க்களம் காணா ராமன்களுக்காய்
சிற்றுண்டியுடன் தவமிருக்கிறார்கள்
இரவுப் பொழுதுகளில்
கதைகளில் உலா வரும்
புலிகளும் சிங்கங்களும்
தூங்கியே வழிகின்றன
இனிப்பாய் விடுமுறைக் கனவுகள்
செல்லக் குழந்தைகளிடத்தில்!
தலையணைக்கு உறையிடும் போதும்
கடுகு தாளிக்கும்போதும் கூட
வீட்டு ராஜாக்கள் ராணிகளுக்கு
அடிபணிந்து போவதாய்
சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்
பவுன் விலையேற்றம் பற்றிக்
கவலைப் படும் இவர்களுக்கு
தள்ளுபடியின் தகவல் சேகரிப்பதில்
பட்டுச் சேலை மடிப்புகளை
சரி செய்வதில் கொண்ட அக்கறையில்
இரண்டு வயது சிறுமியும்
பதின்ம வயதொத்த மற்றும்
இன்ன பலரும் வன்புணர்ந்து
குத்திக் கிழிக்கப்பட்டது
வெறும் சம்பவமாக
மட்டும் இருந்திருக்கலாம்
தங்கள் வாசற்கதவு
தட்டப் படாத வரை!