அரசு வேலையில் சலிப்பு

சிங்கப்பூர்க்கு ஒரு புத்தகம் அனுப்ப வேண்டியிருந்தது. அஞ்சல் துறை வழியாக அனுப்பச் சொல்லியிருந்ததால் காலையில் புத்தகத்தை Pack செய்துகொண்டு ஈரோடு தலைமை தபால் நிலையம் சென்றிருந்தேன். கூட்டம் ஒன்றுமில்லை.

சிங்கப்பூர் அனுப்ப வேண்டும் என்று சொன்னவுடன், அங்கிருந்த பெண் தபால் நிலையத்திற்கென்றே தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் முகபாவனையுடன் ”எங்க முன்னாடி தான் கவர ஒட்டனும், ஏன் ஒட்டிட்டு வந்தீங்க!” என்றார்.

அடுத்து எழுத்துகளும், கோடுகளும் தேய்ந்து நைந்து போயிருந்த இரு படிவங்களைக் கொடுத்து ”ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க” என்றார்.

“ஜெராக்ஸா....!? ஃபார்ம் நீங்க தரமாட்டீங்ளா, அதுக்கும் வேணா காசு வாங்கிங்க” என்றேன்.

“இதுதான் இருக்கு, நீங்க ஜெராக்ஸ்தான் எடுத்துட்டு வரணும்” என்றார்

ஜெராக்ஸ் கடையில் படிவத்தைப் பார்த்தவுடனே அதில் ஒன்றை மட்டும் பெற்று, பிரதி எடுத்துவிட்டு வாங்காத படிவத்திற்குமான ஒரு பிரதியும் கொடுத்தார். நான் கொண்டு சென்றிருந்த நைந்த படிவத்தைவிட மிகத் தெளிவான பிரதி அது.

மீண்டும் தபால் நிலையம் வந்தவுடன் இரண்டையும் நிரப்பச் சொன்னார். நான் அனுப்ப வேண்டிய பொதியில் ஒரு வில்லையை ஒட்டி அதில் இருக்கும் எண்ணை பிரதி எடுத்துக் கொண்டார். நிரப்பிய படிவத்தைக் கொடுத்தால், ”இதுல ஒன்னு, அதுல ரெண்டு காப்பி ஜெராக்ஸ் எடுத்துட்டு, ஒரு ப்ளாஸ்டிக் போல்டர் வாங்கிட்டு, அட்ரஸ் ப்ரூஃப் ஒன்னு கொண்டு வாங்க” என்றார்.

மீண்டும் ஜெராக்ஸ் கடைக்குச் சென்றால் அவர் எதுவுமே கேட்காமல். இவர் கேட்டிருந்த விதமே எல்லாவற்றையும் ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்துவிட்டு கூடவே ஒரு ப்ளாஸ்டிக் போல்டரும் கொடுத்தார். அந்த ப்ளாஸ்டிக் கவரின் விலை, டாஸ்மாக் நவீன் பாரில் பிளாஸ்டிக் டம்ளர் வாங்கும் விலைக்கு ஒப்பானது.

மீண்டும் தபால் நிலையம் வந்தால், அந்த ப்ளாஸ்டிக் போல்டரை வாங்கி அதைத் திறக்க ஒரு பெரும் போராட்டம் நடத்திப் பார்த்தார். பொறுமையிழந்து நானே வாங்கி திறப்பு முனையில் ஒரு கசக்குக்கசக்கி ஊத அது திறந்து கொண்டது. போல்டரை வாங்கி படிவங்களை அதில் இட மீண்டும் போராட்டம் நடத்தினார். அதையும் நானே செய்துகொடுத்தேன்.

மூன்றாம் முறையாக எடை பார்த்தபின், பிளாஸ்டிக் போல்டரை மடித்து பின்பக்கம் ”செலோ டேப் போட்டு ஒட்டிட்டு வாங்க” என்றார்.

“செலோ டேப்புக்கு எங்க போறது, பார்சல கொடுங்க நாளைக்கு கொண்டாரேன்” என்றேன்

வில்லை ஒட்டியது அவருக்கும் புரிந்திருக்க வேண்டும், அக்கம் பக்கம் கேட்டார், அப்புறம் உள்ளே சென்று ’கருணை உள்ளத்தோடு’ எடுத்து வந்து கொடுத்து நீங்களே ஒட்டிக் கொடுங்கள் எனக் கொடுத்தார்.

இப்படியாக மத்திய அரசு நிறுவனத்தின் சேவையை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ’மகிழ்வான’ அனுபவங்களோடு இன்று பயன்படுத்தியிருக்கிறேன்!

எழுதியவர் : செல்வமணி (16-Dec-15, 10:34 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 109

மேலே