காட்சிப் பிழைகள் - 6

தென்றலின் காதில்
நீ கிசுகிசுத்த ரகசியத்தை
மூங்கில்காட்டுப் புல்லாங்குழல்கள்
பங்கிடுமோ என்கிற பயம் உனக்குள்..
அந்த கதகதப்பின் அனல்பட்டு
பரவியது காட்டுத்தீ எனக்குள்..

நீ சுவைத்த நாவல்பழம்
உன்னிதழ் தழுவி மெழுகிய
நீல நிறம் கண்டு ஜில்லென
ஏறியது என் நெஞ்சில் காதல்விஷம்..
அது நீ எனக்காய் அளித்த பொக்கிஷம்..

உன் காலடி ஓசையில் மயங்கி..
சிணுங்க மறந்தது தொட்டாச்சிணுங்கி..

புல்வெளி பூத்தது சிலிர்த்து
உன் பாத ரசத்தை ருசித்து..

உன் முகங்கண்டு
பௌர்ணமி என்றெண்ணி
அலைகள் ஆர்ப்பரித்த கதைகள்
ரகசியமாய் பரவின கடலோரம்
கார்முகில் சொன்னது என் காதோரம்

உன்னைத் தீண்டிய
பூங்காற்று மீண்டும் திரும்பியது
தாழம்பூவுக்கு நன்றி சொல்வதற்கு...
பாதி வழியில் பாரிஜாதப்பூவுடன்
காட்டுமுல்லையும் காத்திருந்தது முன்பதிவுக்கு..

அந்தி நேரம்
அகல் விளக்கேற்றிய
உன் முகம் கண்ட முழுநிலவு
அழகு நிலையம் சென்று விட்டது...

மண்டிய இருளோடு மல்லிடும்
என் உயிரின் மெழுகுதிரி மட்டும்
ஏற்றப் படாமலே உருகிவிட்டது..

காத்திருப்பின் உச்சத்தில்
கடலில் பெய்த பெருமழையாய்
கண்காணா தூரத்தில் நீயும்..
தாகத்தின் தாய்மொழியில்
கவிபாடும் பாலையாய் நானும்..

பூக்களை உதிர்த்த
நெருஞ்சி முட்கள்
குத்தகைக்கு எடுத்த என் நெஞ்சோடு
நினைவின் முற்றத்தில்
தொலைந்து போய் அலைகிறேன்
நனவுகள் அளித்த நஞ்சோடு..

மோகமெனும் முள்முனையின்
மீதமர்ந்து யாசிக்கிறேன்..

வெட்கப்படும் சிலம்பொலி..
சுருதி மீட்டும் சிரிப்பொலி..
இசையாய் பரவியிருக்கும் உன்னுள்
ஒரு கஜலாய்க் கரைந்துபோகக்
காத்திருக்கிறேன்...வருவாயா ?

எழுதியவர் : ஜி ராஜன் (17-Dec-15, 6:02 am)
பார்வை : 544

மேலே