உண்மை பேச வேண்டும்
உண்மை பேச வேண்டும் - முடிந்த
உதவி செய்ய வேண்டும்
மானம் காக்க வேண்டும் - பிறரை
மதித்து வாழ வேண்டும்
காலையில் விழிக்கும் காக்கைக் கூட்டம்
கரைந்தே பிறரை எழுப்பும்
கூவிச் செல்லும் குருவிக் கூட்டம்
கூடியே இரையைப் பொருக்கும்
பொய்யும் புரட்டும் இல்லா மனதை
பொன்னாய் உலகம் போற்றும்
அன்பும் அருளும் இருந்தால் பொதும்
அகிலம் உன்னை வாழ்த்தும்
காலையில் தோன்றும் கதிரவன் மண்ணில்
கதிர்களினால் ஒளி கொடுக்கும்
மாலையில் தோன்றும் நிலவும் இரவில்
மண்டிய இருளை விரட்டும்
இயற்கை எல்லாம் பொதுவாய் இருந்து
இன்பத்தை அள்ளி வழங்கும்
இனமாய் பிரிந்த நம்மையும் பார்த்தால்
இயற்கை எள்ளி நகைக்கும்
உதவிகள் கேட்டு நெருங்கிடும் நேரம்
உறவுகள் ஊமைகள் ஆகும்
வறுமை வந்து வாடிடும் நேரம்
நெருங்கிய உறவும் நீங்கும்
பொன்னை விரும்பும் பூமியில் என்றும்
உண்மைகள் வெல்வது இல்லை
அன்பைக் கொடுத்து ஆசையைக் குறைத்தால்
என்றும் துன்பம் இல்லை.
எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்