உனக்குள்ளே இறைவன்
பக்தி முத்திப் போய்
பண்ணிய பாவம் போக்கவென்று
படையல்கள் பலவகையில்
படைச்சு வைச்சு
போட்ட நகை பத்தாதென்று
புதுசு புதுசா நகைபோட்டு
கல்லென்பர் கடவுளை என்று
கட்டித் தங்கத்தில் சிலை செய்து
எப்பாடு பட்டாவது
எருமைத் தயிரெடுத்து
கற்பூரம் சாம்பிராணி
குடம் குடமாய் பால் கொண்டு
குளிப்பாட்டி வீணாக்கி
பக்திப் பாடல்கள் மலையேறி
பலான பாடல்களால் இசைமுழங்கி
கூடி குத்தாட்டம் போட்டு
கூத்தடிக்கிறோமய்யா
ஓட்டை துணியுடுத்தி
ஒருவாய் சோற்றுக்கு கையேந்தும்
பிஞ்சுகளையும் பெண்களையும் கூட
பிடிச்சு வெளியே தள்ளுகிறோம்
காணச் சகிக்காமல் கடவுளும்
கண்காணா இடத்துக்கு
கதறியடித்து ஓடிவிட்டாரய்யா
காத்து கருப்பு கண்ணூறு
கருவாய் பில்லி சூனியம்
பேய் பிசாசு
பித்துப் பிடித்து பிதற்றுகிறோம்
போதுமய்யா போதும்
போனது போகட்டும்
மிஞ்சிவிட்ட நாட்களில்
விட்டபிழை திருத்தி
போலிகளை மறந்து
பொய்களைக் களைந்து
மடமையைக் கொளுத்தி
மாந்தரை மதித்து
மனிதருள் காண்போம் இறைவனை.