காட்சிப் பிழை - பிரியத்தமிழ்

இந்த இதயச் சுவர்களில்
அஜந்தா ஓவியமாய்
வரலாற்றுப் புத்தகமாய்
வேர்களோடிக் கிடக்கிறது
தகராத பொழுதுகளாய்
உன் நினைவுகள்

அதை விரித்துப்
பார்க்கும் துணிவு
வேர்களைப் பிய்த்து
தகர்க்கும் வன்முறை
யாருக்குமே இல்லை

புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும்
கிழிசல் பட்டு கிழிசல் பட்டு
நார் நாராகி இலட்சம் கைகளுக்குள்
அகப்பட்டு அல்லல்படாமல்
சிதைவுறுத்தப்பட்டது - அந்த
சின்ன மனதிற்கு
தெரியாமல் இல்லை

கை விரித்த கிளைகளை நம்பி
கையூன்றி நகர்ந்த சம்பவங்களை
அசை போட்டு நம்பிக் கிடந்து
நாசமாய் போன இதயம்
துளிர்த்து இலைகளைப் பரப்பி
விரிந்து கொள்வது
விளங்காமல் இல்லை

காற்று ஒரு போதும்
இந்த விரிந்த பக்கங்களை
தூக்கிச் செல்லாது
அந்த இலை பரப்பிய
மனக்கிளையின்
எந்தக் கனியையும்
பறித்துச் செல்ல முடியாது

அந்தக் கூரை இடியும் பொழுதும்
இது வளரும் மரம் தான்
ஆனாலும்
பூங்காற்று ஒரு போதும்
தடவாமல் செல்லாது
என்பது
புரியாமல் புரிய வைப்பதில் மட்டும்
புயல் அடித்துச் செல்கிறது

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (24-Dec-15, 9:20 pm)
பார்வை : 102

மேலே